|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 October, 2011

பொதுநல வழக்கு எதிரொலி சென்னை ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி ஹைகோர்ட் வளாகத்திலேயே கடந்த மாதம் 7ந் தேதி குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குண்டுவெடிப்புக்கு பொருப்பேற்றுக்கொண்ட தீவிரவாத அமைப்போ, தீவிரவாதி அபசல் குருவை விடுதலை செய்யவில்லை என்றால் இன்னும் பலநீதிமன்றங்களில் குண்டுவெடித்து சிதறும் என்று மிரட்டியுள்ளது. இதனால், நாடுமுழுக்க உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்த சட்டக்கல்லூரி பேராசிரியரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் பல்வேறு அதிர்ச்சித் தகவலை சுட்டிக்காட்டுகிறார் நம்மிடம். “உயர்நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்று அரசுமேல், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரே வழக்கு தொடர்ந்தார்... பிப்ரவரி 2007ல். அப்போது, தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதியரசர் சந்துருவும் தமிழக தலைமை செயாளருக்கும், காவல்துறை தலைவருக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்கள். 

அந்த உத்தரவில் நீதிமன்ற பாதுகாப்புக்கு 254 காவலர்களை கட்டாயப்பணியில் 24 மணிநேரமும் ஈடுபடுத்தவேண்டும். அவர்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதியின்றி வேறு எந்த பணிக்கும் அனுப்பக்கூடாது. காவலர்கள் தங்குவதற்காக உயர்நீதிமன்றமே தன்னுடைய செலவில் தங்கும் இடவசதிகளை  ஏற்படுத்தித்தரும்’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்ப்பை  மாநில அரசு  காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்த உத்தரவு வந்த சில நாட்களிலேயே உத்திரபிரதேசம் லக்னோவில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பரபரப்பானது. அதன் விளைவாக மத்திய அரசு... அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், அனைத்து நீதிமன்றங்களின் பாதுகப்பையும் உடனடியாக பலப்படுத்தவேண்டும் என்று ஒரு வழிகாட்டுதலை உத்தரவிட்டிருந்தது. 

அதற்குப்பிறகுதான் இப்படியொரு பாதுகாப்பை உருவாக்கியது தமிழ அரசு. அதாவது... ஏழு கேட்டுகளின் வழியாக உள்ளே நுழையும்போது... ஃப்ரேம் மெட்டல் டிடெக்டர் (வெடிகுண்டு பரிசோதனை கருவி)  என வைத்துக் கொண்டு... போலீசார்  நன்றாக பரிசோதனை செய்துவிட்டுத்தான் உள்ளே அனுப்புவார்கள். ஆயுதம் தாங்கிய அதிரடிப்படை போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வெளி ஆட்கள் உள்ளே யாரைப் பார்க்கப் போகிறார்களோ அவர்களிடம் கடிதம் பெற்றிருக்கவேண்டும். இல்லையென்றால்  அவரே வந்து அழைத்துச் செல்லவேண்டும். அதுவே வழக்கறிஞர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், வழக்கறிஞர்களின் அங்கீகரிக்கப்பட்ட கிளர்க்குகள் என்றால் பதிவாளரால் கொடுக்கப்பட்டுள்ள ஐ.டி.கார்டை காண்பித்தால் பரிசோதனை இல்லாமல் உள்ளே சென்றுவிடலாம். உள்ளே, நுழையும் டூவீலர்கள் ஃபோர்வீலர்களின் நம்பர்களை குறித்துவைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல், ஆட்டோக்கள் வந்தால் வழக்கறிஞர்களை உள்ளே இறக்கிவிட்டுவிட்டு உடனடியாக கிளம்பிவிடவேண்டும். அதன் எண்களையும் குறித்துக் கொள்ளவேண்டும்.

இதையெல்லாம் 2009 ஜனவரியிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடைபிடித்துக் கொண்டுதான் வந்தது காவல்துறை.  ஆனால், மறுமாதமே போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்குமிடையே ஏற்பட்ட கடும்மோதலுக்கு பிறகு மாநில அரசே இந்த பாதுகாப்புகளை நிறுத்திவிட்டது. ஆனால், இந்த பாதுகாப்புகளை மீண்டும் மாநில அரசு  அமல்படுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 2009 அக்டோபர் 29 ந்தேதி.. ஆனால்,  ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் மாநில அரசோ, உள்துரை அமைச்சகமோ நீதிமன்றத் தீர்ப்பை கண்டுகொள்ளவே இல்லை. 

இதனால் உயர்நீதிமன்றத்தின் நிலைமை எப்படி மாறிப்போனது தெரியுமா? என்றவர் சொல்லும்போதே பரிதாபமாக இருக்கிறது. “நீதிமன்ற பாதுகாப்பில் வெறும் 60 போலீஸார்தான். இதில், 40க்கு மேற்பட்டவர்கள் ஆயுதங்களே இல்லாத பெண் காவலர்களே. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கு அதிகமானோர் வந்துபோகிறார்கள். இதற்குள் 74 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அப்பேர்ப்பட்ட நீதிமன்றத்தில் யார் வேணும்னாலும் உள்ளே வரலாம்...போகலாம் என்கிற அவல நிலை உருவானது. ஹைகோர்ட்டுக்கு வெளியே விற்குற வெள்ளைச்சட்டை கருப்புப் பேண்டை மாட்டிக்கிட்டு உள்ளே வந்தா வழக்கறிஞர்னு நினைச்சுக்கிட்டு(?).. போலீஸார் எந்த கேள்வியும் கேட்பதில்லை.  உள்ளே நுழையும்போது வெடிகுண்டு சம்பந்தமான எந்த பரிசோதனைகள் மட்டுமல்ல சின்ன செக்கப் கூட செய்வதில்லை. ஆட்டோக்கள் உள்ளே வந்து நிறுத்தி ஆட்டோ ஸ்டேண்டுகளே உருவாகிடுச்சு.  டெல்லியில் குண்டுவைத்த தீவிரவாதிகளை அடையாளம் காணமுடியாமல் போலிஸார் மண்டையை பிய்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணமே நீதிமன்ற வளாகத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாததுதான். இன்னைக்கு, டீ கடைகளில் கூட ரகசிய சி.சி.டி.வி. கேமராக்கள் பொடுத்தப்பட்டிருக்கு. ஆனா, இவ்ளோ பெரிய நீதிமன்றத்தில் எந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் கிடையாது.  ஒரு ரூபாய்க்கு விற்குற அட்வகேட் ஸ்டிக்கரை வாங்கி கார்ல ஒட்டிக்கிட்டு உள்ளே நுழையுற ரவுடி கும்பல்கள்...நீதிமன்ற வளாகங்களிலேயே கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதும்... வழக்கை வாபஸ் பெறவைக்க வன்முறைகளில் ஈடுபடுவதும் நடக்குது. 

சில வாரங்களுக்கு முன்பு ஒருத்தன் வழக்கறிஞர் மாதிரி உள்ள நுழைஞ்சு நீதிமன்ற ஊழியர்களை கத்தியை காட்டி மிறட்டிய சம்பவம் நடந்துருக்கு. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் டெல்லியில் குண்டுவெடித்த மறுநாள் 8ந் தேதியே...  உயர்நீதிமன்றத்தில் உடனடியாக பாதுகாப்புகளை பலப்படுத்தவேண்டும் என்று  கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தேன். இதன் பலனாக சி.சி.டி.வி. கேமரா, பேக்கேஜ் ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்து பதுகாப்புகளையும் அமல்படுத்தக்கோரி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்கிறார் அதிரடியாக. இதன் தொடர்ச்சியாக கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், இணைக் கமிஷனர் ஜெயராமன், துணைக் கமிஷனர்கள் அன்பு, சந்தோஷ் குமார், உதவிக் கமிஷனர்கள் முரளி, நரசிம்மவர்மன், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில், கடந்த 9ஆம் தேதி 400 போலீசார் அதிரடியாக பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள். 

அதற்குப் பிறகு துணை கமிஷனர் அன்பு நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில், ஐகோர்ட்டில் 6 மெயின் கேட்டுகளுக்கும் செக் போஸ்ட்கள் அமைத்து, அங்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் குடும்ப நல கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். சட்டக் கல்லூரி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாசல் வழியாக, உள்ளே வரவேண்டும். பார்வையாளர்களை சோதித்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை வழங்க சோதனை மையம் ஒன்று புதிதாக அமைக்கப்பட உள்ளது. இங்கு மூன்று ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.வக்கீல்கள் செல்வதற்கு, வருவதற்கும் தனி வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளது. வக்கீல்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், அவர்கள் பார்க்க வரும் வக்கீல்களிடம் இருந்து உரிய அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது. 200 பெண் போலீசார் உள்பட 430 போலீசார் பாதுகாப்பு பணியில் மூன்று ஷிப்ட்டாக ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து கேட்டுகளிலும் பாதுகாப்பு பணிக்காக 60 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பாதுகாப்பு இருக்கும். வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கும், மோப்ப சக்தி திறன் வாய்ந்த இரண்டு மோப்ப நாய்கள் கொண்ட மோப்ப நாய் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஐகோர்ட் வளாகம் முழுவதும் சுற்றி வந்து சோதனையில் ஈடுபடுத்தப்படும் என்று கூறினார்.

மேலும், ஐகோர்ட் பாதுகாப்புக்கு அனைத்து கேட்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும், கேமராக்கள் பொருத்தப்படும். சென்னை கோட்டையில் உள்ள பாதுகாப்பு போலவே, சென்னை ஐகோர்ட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஐகோர்ட் பாதுகாப்புக்கு தலைமை தாங்க விரைவில் ஒரு துணைக் கமிஷனர் தனியாக நியமிக்கப்படுவார். அவருக்கு கீழ் ஒரு கூடுதல் துணைக் கமிஷனரும், இரண்டு உதவிக் கமிஷனர்களும், 7 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த பொதுநல வழக்குக்கு கிடைத்திருக்கும் ஆரம்பகட்ட வெற்றி!


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...