மாமனார், மாமியார் கொடுமை தாங்க முடியாத மருமகன் பூச்சி மருந்தைக் குடித்து
தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு மாமனார், மாமியார் தான்
காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர்
குணசேகரன் (25). நெசவு தொழிலாளி. கடந்த ஆண்டு அவர் சென்னை
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் மீனாட்சியை மணந்தார்.
கடந்த வாரம் மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க
குணசேகரன், தனது தாயுடன் சென்னையில் உள்ள மீனாட்சி வீட்டுக்கு வந்தார்.
அங்கு மீனாட்சியின் பெற்றோர் அவரை உதாசினப்படுத்தியுள்ளனர். இதனால்
குணசேகரன் மனமுடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் கடந்த 6-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி
மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த
போலீசார் குணசேகரனின் வீட்டுக்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் சோதனை செய்தபோது குணசேகரன் தன் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது.
13 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் எட்டாம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன். தனியார் கம்ப்யூட்டர்
சென்டரில் டி.டி.பி. கோர்ஸ் படித்து முடித்து இருக்கிறேன். இதை
தெரிந்துதான் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணம் நடந்த
நாளில் இருந்தே என்னிடம், உனக்கு அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்து
விட்டோம். அதிகமாய் படித்து பணக்கார ஆண் மகனாய் பார்த்து எனது மகளை
திருமணம் செய்து இருக்க வேண்டும் என்று கூறி எனது மாமியார் என் மனதை
காயப்படுத்தினார்.
ஒருநாள் குடும்பத்தகராறு காரணமாக எனது மனைவியை குமாரபாளையத்தில் உள்ள அவரது
அக்காள் வாணி வீட்டில் விட்டுவிட்டனர். இதை அறிந்து என் நண்பர் மூலம் எனது
மாமனாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர், நான்
நினைத்தால் 5 நிமிடத்தில் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் உன்னையும், உன்
குடும்பத்தினரையும் உள்ளே தள்ளி விடுவேன். நீ ஒருத்தியை வைப்பாட்டியாக
வைத்து இருக்கிறாய் என்று கூறி வெளியே வரமுடியாதபடி செய்துவிடுவேன் என்று
கூறி மிரட்டினார்.
எனது மனைவியை சந்தித்து பேசியபோது, நீ எனக்கு தேவையில்லை. எனது தாய்,
தந்தையர் தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டாள். பின்னர் கர்ப்பிணியான
என் மனைவியை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நானும் அங்கு சென்று 5
நாட்கள் தங்கி இருந்தேன்.
அப்போது என் மனைவியின் எதிரிலேயே என்னை ஜாடை, மாடையாய் திட்டினார். மேலும்
என் மனைவி இல்லாதபோது, நீ ஊருக்கு போ. இங்கே இருக்க வேண்டாம். குழந்தை
பிறந்தால் நாங்களே சொல்கிறோம். நீ இங்கே இருந்தால் என் மகளின் மனதை மாற்றி
உன்னோடு அழைத்து சென்றுவிடுவாய் என்று என் மாமியார் கூறினார். நானும்
ஊருக்கு வந்துவிட்டேன்.
சென்ற 4ம் தேதி காலை 8.11 மணிக்கு என் மனைவி பெண் குழந்தையை
பெற்றெடுத்தாள். எனக்கு மதியம் 3.30 மணிக்கு தகவல் தந்தனர். நானும், என்
அம்மாவும் அன்று இரவே சென்னைக்கு சென்றோம். என் குழந்தையை பார்த்து நான்
மிகவும் சந்தோஷமடைந்தேன். இந்த சந்தோஷம் சில நிமிட நேரம்தான். என்னிடம்
தனியாக பேசிய மீனாவின் அம்மா, குழந்தையை பார்த்துவிட்டு உடனே நீ
செல்லவேண்டும். என் பெண்ணிடம் நீ எதுவும் பேசக்கூடாது. உன் குழந்தை எங்கள்
பெண்ணுக்கு தேவையில்லை. அதை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடுகிறோம் என்றார்.
மேலும் என் மனைவிக்கும், எனக்கும் விவாகரத்து வாங்கிவிட்டு அவளுக்கு வேறு திருமணம் செய்ய போவதாக மிரட்டினார். நான் என்ன செய்வேன்.
ஐயா, நான் ஒரு ஏழை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவியுடன் வாழ
மிகுந்த ஆசை. ஆனால் அவளது தாய், தந்தையர் எங்களை வாழவிட மாட்டேன்
என்கிறார்கள். என் மனைவியும் என்னை புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய இந்த
தற்கொலைக்கு முழுக்க, முழுக்க எனது மாமனாரும், மாமியாரும்தான் காரணம் என்று
அவர் அதில் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment