சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம்
பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி
படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.
அழகிய வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே! அன்னையே! என்
மனத்தாமரையிலும் நீயே வீற்றிருக்க வேண்டும். பிரம்மதேவன் விரும்புகின்ற
வெண்சங்கு போன்ற நிறமும், அழகிய திருவடிகளும் கொண்ட தாயே! உன்னை
வணங்குகிறேன். அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே! வெண்பளிங்கு
போல் ஒளி பொருந்தியவளே! எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே
காத்தருள வேண்டும். வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும்,
உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே! தினமும்
உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை தந்தருளவேண்டும். அறிஞர்களால்
விரும்பப்படுபவளே! பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே!
முத்துமாலையைக் கையில் ஏந்தியவளே! கலைகளின் நாயகியே! வேதம் நான்கையும்
காத்தருள்பவளே! உன் அருளின் தன்மையை வியந்து போற்றுகின்றேன். சொர்க்கம்,
பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் படைத்தவளே! சூரியோதய வேளையிலும்,
சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே! அன்று மலர்ந்த
பூவைப் போன்ற முகத்தையுடையவளே! என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி
அருள்புரிய வேண்டும். அன்னையே! உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில்
புகுந்து அக இருளைப் போக்குபவளே! அறிவிற்கு ஆதாரமாய் திகழ்பவளே! ஞானத்தின்
பிறப்பிடமே! நாவில் உறையும் நாமகளே! திருமாலின் உந்திக் கமலத்தில் வாழும் பிரம்மனின்
துணைவியே! மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே! தாயே! உன்னருளை என்
மீது பொழியச் செய்யவேண்டும். பெண் மான் போன்ற மருட்சி தரும் பார்வை
உடையவளே! குற்றத்தைப் போக்கியருளும் குணக்குன்றே! அறியாமையை நீக்கும்
மாமருந்தே! மெல்லிய பூங்கொடியாய் மகிழ்ச்சியில் திளைப்பவளே! உன் திருவடித்
தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக. சுவடி,
ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே! உபநிஷதங்களின் உட்பொருளானவளே! பாடுவோர்,
கல்வி பயில்வோர் நாவில் குடியிருப்பவளே! உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம்
யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை
தந்தருள்பவளே! உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை! உன் கருணைப் பார்வையை என்
மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய். சரஸ்வதி தாயே!
உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது
என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே! தரமான
கல்வி, தர்ம வழியில் ஈட்டிய செல்வம், புகழ்மிக்க வாழ்வு ஆகியவற்றை எனக்கு
தந்தருள்வாயாக.
சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்: சரஸ்வதிக்குரிய
நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திரம் உச்சமாயிருக்கும் வேளையில் சரஸ்வதியை
ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். திதியின் அடிப்படையில் நவமியன்று பூஜை
செய்வர். அதனால் சரஸ்வதி பூஜைக்கு மகாநவமி என்றும் பெயருண்டு. இந்த ஆண்டு
அக்.4ல் மூலநட்சத்திரம் வந்தது. அக்.5ல் நவமி வந்துள்ளது. இந்தக்
குழப்பத்தை தீர்க்கத்தான், ஒரு காலத்தில் மூலத்தன்று தொடங்கி திருவோண
நட்சத்திரம் வரை நான்கு நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்தனர். காலப்போக்கில்
இவ்வழிபாடு மறைந்துபோனது. நட்சத்திரங்களில் மூலமும், திருவோணமும்
கல்விக்குரியவை. திருவோணத்திற்கு சிரவணம் என்றும் பெயருண்டு. சிரவணம்
என்பதற்கு குருவின் உபதேசங்களைக் கேட்டல் என்று பொருள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: கல்வி தெய்வமான
சரஸ்வதிக்குரிய பூஜையை ஆயுதபூஜை என்பர். தொழில்முறையில் அவரவருக்குரிய
தொழிற்கருவிகளை இந்நாளில் வழிபடுவதால் இப்பெயர் வந்தது. வாழ்வில் வெற்றி
பெற, ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க
வேண்டும். அம்பிகையின் அருள் ஒருவனுக்கு இருந்தால், அவன் தைரியசாலியாக
இருப்பான். சரஸ்வதியின் அருள் பெற்றவர்களின் கையில் கத்திக்குப் பதிலாக
எழுத்தாணியே இருந்தது. இதையே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று
குறிப்பிட்டனர். எழுத்து என்பது மிகப்பெரிய சக்தி. பல வல்லரசுகளையும்
ஒருவனது எழுத்து கவிழ்த்து விடும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத்
தூண்டும்.இலக்கிய விருதில்
வாக்தேவி சின்னம்! இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. இந்த
விருதில் இடம்பெற்றுள்ள சின்னத்தை வாக்தேவி (வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி)
என்பர். கி.பி.1034ல் போஜமகாராஜன் உஜ்ஜயினியில் நிர்மாணித்த கோயிலில் உள்ள
சரஸ்வதியின் வடிவம் இது. தற்போது இந்தச்சிலை லண்டன் பிரிட்டிஷ்
அருங்காட்சியகத்தில் உள்ளது. ஞானபீடபரிசு பெறுபவருக்கு பஞ்சலோக வாக்தேவி
சிலை வழங்கப்படும். அவள் 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் நின்றபடி
காட்சிதருவாள். இந்த இதழ்கள் 14 இந்திய மொழிகளைக் குறிப்பதாகும். இவளது
கைகளில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, சுவடி இருக்கும்.
No comments:
Post a Comment