|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 October, 2011

ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள் !


சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் தூதுரக அதிகாரிகள், 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர். ப்போது பேசிய ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. இம்தியாஸ் கூறியதாவது,சவூதி அரேபியாவில் 21 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலன நேரங்களில் அவர்களின் நிறுவனத்தினரினாலேயே ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கு தூதரகம் உரிய உதவிகள் செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்திய தூதரகத்தின் சமுதாய நலப்பிரிவில் கூடுதல் ஆட்களை பணியமர்த்த வேண்டும்.சவூதி அரேபியாவில் இந்திய தூதுரகத்தின் சார்பில் நடக்கும் பள்ளிகளின் வருட வாடகை சுமார் 20 முதல் 25 மில்லியனாக உள்ளது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடியும் பொழுதும் கட்டிட உரிமையாளர்கள் உயர்த்தும் வாடகையால் பள்ளிகளின் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றது. எனவே, தூதர் அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் சமுதாய ஆர்வலர்களையும் சேர்த்து ஒரு குழு அமைத்து அரசாங்க கடனுதவியுடன் முதல் கட்டமாக மூன்று முக்கிய பிராந்தியங்களிலும் நமக்குச் சொந்தமான பள்ளிக் கட்டிடத்தை கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று அவர்களின் பிள்ளைகளின் மேல்படிப்பு. பிள்ளைகளின் படிப்பு காரணமாக ஆண்கள் இங்கு வேலை செய்வதும், குடும்பம் இந்தியாவில் தனித்து இருப்பதுமாக அவதியுற நேர்கிறது. இதனை மனதில் கொண்டு தூதர் அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் சவூதி அரேபியாவில் மேல்படிப்பு படிப்பதற்குண்டான கல்லூரிகள் தொடங்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.மேலும் பலரும் கோரிக்கைகளுடன் தூதுவரை வாழ்த்தினார்கள். இதற்கு ஏற்புரை வழங்கிய இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் அனைவரின் கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார்.மேலும், சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் தங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அதற்காக தூதரகம் http://www.indianembassy.org.sa என்ற இணையதளத்தில் வசதிகள் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.மேலும் அவர் கூறும்பொழுது இந்தியா-சவூதி இருவழி வர்த்தகம் கடந்த வருடம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டதாகவும், கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் எண்ணெய்த் தேவையை 20 சதவீதம் சவூதி அரேபியா பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இந்தியா சவூதி அரேபியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதாக தெரிவித்த அவர் இந்தியர்களின் முதலீடு 2 பில்லியன் டாலராக உள்ளது என்றும் தெரிவித்தார்.இந்தியர்களின் கண்ணியமும், கடின உழைப்பும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மதிப்பை பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறினார்.நிகழ்ச்சியின் இறுதியில் தூதர் அவர்கள் அங்கு கூடியிருந்த அனைத்து இந்தியர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டது இந்தியர்களின் மனதில் மக்களுக்காக அமர்த்தப்பட்ட தூதுவர் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...