சேலம்:பள்ளி மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட்
கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில்,
2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும்,
2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப்
பள்ளிகளும் உள்ளன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய
விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை,
விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் பதிவேடுகளில்
பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கி, மாணவ,
மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு
ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே
குறியீட்டு எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாநிலம்
முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் சர்வரில், இந்த குறியீட்டு
எண்ணில் அம்மாணவனின் சுய விபரம், வருகை பதிவேடு, விளையாட்டு, மதிப்பெண்
உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பறையிலும்,
"ஸ்வீப்பிங்' மிஷின் வைத்த பின், மாணவன் தனது வருகையை, "ஸ்மார்ட் கார்டு'
மூலம், "ஸ்வீப்' செய்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில்
எந்த மூலையில் இருந்தும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்
நடவடிக்கைகளையும், விபரங்களையும் பெற முடியும்.மேலும், வேறு ஊர் அல்லது
வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்கள், "டிசி' உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறாமலேயே,
ஸ்மார்ட் கார்டு மூலம் படிப்பை தொடர முடியும். நம்நாட்டில் முன்னோடியாக,
குஜராத்தில், ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றிகரமாக அனைத்து அரசு
பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை, தமிழகத்திலும் செயல்படுத்தி, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு,
"ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுயவிபரம் மற்றும்
பள்ளி நடவடிக்கைகள் மட்டுமின்றி, ஆரோக்கியம் குறித்தும் இந்த ஸ்மார்ட்
கார்டில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவனையும் மருத்துவ
பரிசோதனை செய்து, அந்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. இடை நிற்கும்
மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.முதல்கட்டமாக, அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு "ஸ்மார்ட்
கார்டு' வழங்கப்பட உள்ளது. இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை தொடர்ந்து,
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த மாதம் நிபுணர் குழு
ஒன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து, இத்திட்டத்தின் செயல்பாடுகள்
குறித்து ஆய்வு செய்து வந்துள்ளனர்.இன்னும் ஓரிரு வாரங்களில்,
இத்திட்டத்துக்கான துவக்க விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கல்வித்துறையில் நிலவும் பல்வேறு நடைமுறை
சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment