|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 October, 2011

சாதித்துக் காட்டினார் தோனி!


இந்திய கேப்டன் தோனி தொட்டதெல்லாம் மீண்டும் பொன்னாகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பட்டையை கிளப்பிய இவர், பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்தார். அணியை அருமையாக வழிநடத்திய இவர், இளம் வீரர்களுக்கு உரிய ஊக்கம் அளித்தார். இதன் காரணமாக சச்சின், சேவக், ஜாகிர் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி, தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது. சுழற்பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதல் கட்டமாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று முன் தினம் கோல்கட்டாவில் நடந்த ஐந்தாவது போட்டியில் தோனியின்(75) அதிரடி கைகொடுக்க இந்திய அணி(271/8), இங்கிலாந்தை(176) மீண்டும் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர, இங்கிலாந்து மண்ணில் சமீபத்தில் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இம்முறை இந்திய அணியின் வெற்றிநடைக்கு கேப்டன் தோனி முக்கிய காரணம். ரன் மழை பொழிந்த இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இத்தொடரில் தோனியின் சில சாதனைகள்: 
* கோல்கட்டாவில் 75 ரன்கள் எடுத்த தோனி, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அசார்(5, 239), கங்குலிக்கு (5104) பிறகு இப்பெருமையை பெறும் மூன்றாவது இந்திய கேப்டன் ஆனார்.
* ஒரு தொடரின் நான்கு இன்னிங்சில் அவுட்டாகாத முதல் இந்திய வீரரானார். இம்முறை 87(ஐதராபாத்), 35(மொகாலி), 15(மும்பை), 75 ரன்கள் (கோல்கட்டா) எடுத்தார். டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் "பேட்' செய்யவில்லை. இவர், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 6 இன்னிங்சில் அவுட்டாகாமல் 340 ரன்கள் எடுத்து, புதிய சாதனை படைத்துள்ளார். 
* கோல்கட்டாவில் தனது 43வது அரைசதம் அடித்தார். ஏற்கனவே 7 சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கும் மேல் 50 முறை(43+7) எடுத்த நான்காவது விக்கெட் கீப்பரானார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(72), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்(69), ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர்(50) உள்ளனர். தவிர, இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரில் 25 "கேட்ச்' பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றார்.
* ஒருநாள் அரங்கில் ஆறாவது முறையாக தொடர் நாயகன் விருது வென்றார். இது இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது முறை. தோனிக்கு அடுத்து ரவிந்திர ஜடேஜா அசத்தினார். கோல்கட்டாவில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். இத்தொடரில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தினார். சுழலில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் 10 விக்கெட் கைப்பற்றினார்.


இத்தொடர் குறித்து கேப்டன் தோனி கூறியது: இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு தொடர்ந்து மோசமாகவே உள்ளது. இதை கர்வத்துடன் சொல்லவில்லை. புள்ளிவிவரங்களை பார்த்தால் உண்மை தெரியும். இங்கு நடந்த கடந்து மூன்று (2006, 2008, 2011) ஒருநாள் தொடரில் இந்தியா 16 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஆனால், பேட்டிங் தான் எடுபடவில்லை. தொடரை 5-0 என வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை இங்கிலாந்தில் சந்தித்த தோல்விக்கு பழிதீர்த்ததாக கருதக் கூடாது. ஏனென்றால் விளையாட்டில் பழிவாங்குவதற்கு இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை குறிப்பிட விரும்புகிறேன். இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது. தற்போதைய தொடரில் கூட நமது வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக 10 ஓவர்கள் வீச முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால், பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ரெய்னா, திவாரி போன்றவர்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படாது. 


"பேட்டிங்' வரிசையில் 6வது வீரராக களமிறங்கி விளையாட பழகிக் கொண்டேன். "பவர் பிளே' விதிமுறை மாற்றம் காரணமாக இந்த நிலையில் மிகவும் கவனமாக "பேட்' செய்ய வேண்டும். இங்கிலாந்து மண்ணில் தோற்ற போது கடுமையாக விமர்சித்தார்கள். இதைப் பற்றி கவலைப்படவில்லை. வெற்றி பெற்றால் பாராட்டுவார்கள் என்பது எனக்கு தெரியும். சச்சின், சேவக், யுவராஜ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும், சீனியர் வீரர்களின் இடத்தை எளிதில் நிரப்ப முடியாது.உலக கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். சச்சின் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லை. இதனால், ஈடன் கார்டனில் குறைவான ரசிகர்கள் வந்திருக்கலாம். தவிர, இந்தியாவின் மிகப் பெரிய மைதானமான இங்கு அனைத்து நேரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு இல்லை. இவ்வாறு தோனி கூறினார். 


தோல்விக்கு என்ன காரணம் குக்: ""இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் சோபிக்காததே, தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது: இத்தொடரில் எங்கள் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. நிறைய வீரர்கள் முதன்முறையாக இந்திய மண்ணில் விளையாடினர். இங்குள்ள மைதானத்தின் தன்மை, தட்பவெப்பநிலை குறித்து முழுமையாக அறியமுடியவில்லை. இங்கிலாந்து மண்ணில் கண்ட தோல்விக்கு பின், இந்திய வீரர்கள் முழு நம்பிக்கையுடன் விளையாடினர். எங்கள் அணியின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது. ஆண்டர்சன், பிராட் இல்லாத நிலையில் ஸ்டீவன் பின் வேகத்தில் நம்பிக்கை அளித்தார். தோனி, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு சுலப வெற்றி கிடைத்தது. வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியை காண குறைந்த அளவில் ரசிகர்கள் வந்தது ஆச்சரியமாக இருந்தது.  இவ்வாறு அலெஸ்டர் குக் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...