தமிழக மின் வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்ட புதிய மின் கட்டண உயர்வு கோரிய மனுவை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய கட்டண உயர்வு குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்திய பின், மூன்று மாதத்திற்குள் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, ஆணையம் வெளியிடவுள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக மின் வாரியம், புதிய கட்டண உயர்வு கோரி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த 17ம் தேதி, மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை, மின் ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.இதைத் தொடர்ந்து, புதிய மின் கட்டண உயர்வு குறித்து, டிசம்பர் 2ம் தேதியன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து எழுத்து மூலமான கருத்துக்கள் மற்றும் மறுப்புரைகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் ஆணையம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், கருத்து அறியும் கூட்டங்கள் நடத்திய பின், மூன்று மாதத்திற்குள் புதிய மின் கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் நடைபெறவுள்ளது.
செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.தற்போது, இந்த புதிய கட்டணப்படி, வீடுகளுக்கு ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ரூ.2ம், 201 முதல், 500 யூனிட்களுக்கு, ரூ.3.50ம், 501 யூனிட்களுக்கு மேல் ரூ.5.75ம் கட்டணம் உயருகிறது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ரூ.4ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு என தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment