நான் தமிழர்களின் பிரதிநிதியாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யுனைடெட் விஷுவல்ஸ் நாடகக் குழுவின் நிறுவனர் ‘டி.வி.'வரதராஜன், தனது குழுவினருடன் கடந்த 13ம் தேதி முதல் அகமதாபாத், மும்பை, சூரத் ஆகிய நகரங்களில் நாடகங்கள் நடத்தினார். அகமதாபாத்தில் நாடகம் நடத்தச் சென்ற குழுவினர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு குறித்து வரதராஜன் கூறுகையில், "குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை வலியுறுத்துவதற்காக சீனா சென்றிருந்த முதல்வர் நரேந்திர மோடி அகமதாபாத் திரும்பியிருந்தார்.
அவரை சந்தித்து பேச வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தவுடனே எங்களுக்கு நேரம் ஒதுக்கினார். எங்கள் குழுவை வரவேற்று அன்பாக உபசரித்து அரை மணி நேரம் எங்களுடன் கலந்துரையாடினார். குழுவில் உள்ள அனைவரையும் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தச் சொல்லி எங்களைப் பற்றி தெரிந்து கொண்டார். கலைஞர்கள் நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அவர் பேசியபோது அவரது முகம் பெருமிதத்தில் பூரித்தது. தான் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள மணிநகரில் தமிழர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், தமிழர்களின் பிரதிநிதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் மோடி தெரிவித்தார். அதை கேட்டு நாங்கள் எல்லாம் நெகிழ்ந்துபோனோம். தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் குஜராத் வாழ் தமிழர்களுக்காக நாடகம் ஒன்றை நடத்த அனுமதி கேட்டதற்கு உடனே ஒப்புதல் அளித்தார்," என்றார்.
No comments:
Post a Comment