|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

முதல் தரிசனம் பெண்களுக்கு!


எந்தக் கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவனின் புராண இதிகாச வரலாறு அடிப்படையில் தான் அந்த இறைவனுக்குரிய வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன. சில தலங்களில் துளசி இல்லை; வைணவக் கோவில்களில் திருநீறு நுழைவதில்லை. ஒவ்வொரு இறைவனுக்கும் தனித் தனி வழிபாட்டுப் பூக்கள் உண்டு; வழிபாட்டு முறைகளும் உண்டு. இந்த இறைவர்களை வணங்கும் பக்தர்களுக்கும் தனித்தனி அனுஷ்டானங்களும் உண்டு. இறைவழிபாட்டில் காணும் இந்த வேறுபாடுகளை யாரும் காரணம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் இவைகள் கற்பிக்கப்பட்ட காரணங்கள் அன்று. இறைவனே விரும்பி ஏற்கும் வழிபாட்டு முறைகள் ; அனுஷ்டானங்கள்.
சபரிமலையில் குடிகொண்டுள்ள  ஐயப்பனுக்கும் தனியான அனுஷ்டானங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்திருப்பது வரலாற்றுப் பின்னணியோடு அமைந்த புனிதமான ஒன்றாகும்.  ஐயப்பன் பரிபூரண பிரம்மச்சரியத்தை கைக்கொண்டு அதையே தனித் தத்துவமாக்கி, அந்தத் தத்துவத்தின் விளக்கமாகச் சபரி மலையில் விளங்கிக் கொண்டிருப்பவர். பிரமச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு அருள் பாலிக்க மறுக்கும் கடவுள் என்று அர்த்தம் ஆகாது. பூரண பிரம்மச்சரிய நிலையில் தவத்தில் ஆழ்ந்திருக்கும் ஐயன் எத்தனையோ விதங்களில் பெண்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவர் நோக்கில் உலகப் பெண்கள் அனைவரும் மஞ்சமாதாக்கள். எனவே பெண்களின் மஞ்சள் குங்குமத்திற்கும் மாங்கல்ய பலத்திற்கும்  ஐயப்பன் காவலனாக அமைந்துள்ளார்.

ஐயப்பன் வழிபாட்டில் பெண்கள் அவர் சன்னிதானத்தை நேரிடையாகக் கண்டு, பரிபூரணக் காட்சியில் திளைத்து, அருள் பெரும் நிலை இல்லாதிருப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகாது. ஐயப்ப வழிபாட்டுத் தத்துவத்தை முழுமைப்படுத்தும் முறையில் மேற்கொள்ளும் புனிதப்பயணத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றேயாகும். எனவே பெண்கள் வரக்கூடாது என்பது தடை செய்யப்பட்டதன்று; தத்துவமாக்கப்பட்ட ஒன்று. சபரிமலைக்குச் செல்லும் சாமிமார்கள் ஒரு மண்டலம் தவ வாழ்க்கையில் விரதங்களை மேற்கொண்டுள்ளார்கள். தாயுடன் இருக்கும் காலத்தில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கனிவு, பாசம் பற்று இவையனைத்தும் திருமணத்திற்குப் பின்பு மனைவிடம் பெறமுடிகிறது. பெண்களின் இந்தத் தாய்மைப் பண்புகளை நினைத்து நன்கு பாராட்டும் வாய்ப்பு இந்த விரதகாலத்தில் ஆண்களுக்குக் கிடைக்கிறது. எல்லாப் பெண்களையும் தாய்மைப் பண்பில் கருதும் மேலான காலம் இது. மாளிகைபுரம் என்று மரியாதையாக மட்டுமல்லாமல் புனிதமான தெய்வநிலையிலும் அவர்களை அழைக்கிறார்கள். எனவே ஐயப்பன் விரதகாலங்களில் வீட்டில் கண் கூடாகக் காணுத் தெய்வங்கள் பெண்களே.
இந்தப் பெண்களுக்கு  ஐயப்பன் அருள் எவ்வாறு கிடைக்கிறது? அவர்களும் ஆண்களைப் போன்று மலைக்குச் சென்று ஐயனைக் காணாத நிலையில் அவன் அருள் கிட்டிவிடுமா? 

இது நியாயமான கேள்வி. ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவத்தில் ஆண்கள் மலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் முன்னரே ஐயன் அருள் பெண்களுக்குத்தான் முதலில் கிடைக்கிறது. விரதம் மேற்கொள்ளுங் காலங்களில் சாமிமார்கள் ஒவ்வொருவரும் ஐயப்பனாகவே ஆகிவிடுகிறார்கள். விரதகாலங்களில் பெண்கள் செய்யும் திருத்தொண்டுகள் அனைத்தும் குடும்பத்திலுள்ள ஒருவருக்குச் செய்யும் நடைமுறைச் செயல்களாக அமையவில்லை.  ஐயப்பனுக்கே அவர்கள் திருத்தொண்டுகள் ஆற்றும் பெரு வாய்ப்பு பெண்களுக்கே கிடைக்கிறது. சபரிமலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் சாமியார்களுக்கு முன்னதாகவே அவர்களுக்குச் செய்யும் திருத்தொண்டுகளால் ஒவ்வொரு நாளும் விளக்கேற்றும் அருஞ்செயல்களால் எல்லாவற்றிற்கும் மேலாக விரதம் பூரணமடைய ஒத்துழைப்புகளைத் தருகின்ற புனித எண்ணங்களால் ஐயப்பனின் அருள் ஆசிகளைப் பெண்கள் முன்னதாகவே பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இந்த நடைமுறைத் தத்துவங்களே ஐயப்ப வழிபாட்டில் இடம் பெற்றுவிட்ட படியால் பெண்கள் வெகு தூரத்தில் சிரமான நிலையில்- கடினமான பாதைகளில்- காட்டில்-மலையில்-கடந்து சென்று இறைவனைக் காணவேண்டியதில்லை. மற்ற வழிபாட்டில் காணப்படும் வழிபாட்டு முறைகளைவிட  ஐயப்ப வழிபாட்டு முறைகள் தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. உலக மாயைகளில் சிக்கித் திணறுவோர் மனஅடக்கம். புலன் அடக்கம் இவற்றிற்கான பயிற்சியில் ஈடுகொண்டு வெற்றி பெற்று, இந்த அடக்கங்களின் தத்துவமாய் மலையில் இருப்பவனைக் காணுவது ஐயப்ப வழிபாட்டின் சிறப்பான விஷயம். பெண்கள் இங்கிருந்தபடியே மன அடக்கம், புலனடக்கம் பெற்று ஐயப்ப சுவாமிமார்களுக்கு சேவை புரிந்து ஐயப்பனின்  அருள் பெறுகின்றனர். ஆனால் ஆண்கள் இதை விரதமாக கடைப்பிடித்து சபரிமலை சென்று இறைவனை காண்கின்றனர். இந்த எண்ணத்தில்தான் பரம்பரை பரம்பரையாக ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே செல்வது வழக்கமாக உள்ளது.

இவை தவிர-
1. சன்னதியிலும், சுற்றுப்புறத்திலும் பெண்களுக்கென்று தனி வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.

2. விரதமிருப்பவர்கள் பெரியபாதையின் வழியாகச் சென்று வழிபாடு செய்வதே முறையாகவிருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் நடந்து செல்ல வேண்டும். பெண்கள் காடுகளினூடே இரண்டு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளுவது கடினமான ஒன்றாகும்.

3. கடுங்குளிர், மழை இத்தகைய சூழ்நிலைகள் அனைவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. குளிப்பது தூங்குவது முதலிய அனைத்துச் செயல்களும் தனித்துச் செய்யும் வாய்ப்பில்லை.

4. சாமியைத் தவிர வேறு நினைவொன்றும் மலையில் வருவதில்லை வரவும் கூடாது. சில நேரங்களில் ஆண்களது மனம் பக்குவமடையாத நிலையில் தங்களின் பிரம்மசரிய விரதங்களுக்குத் தடைகள் வரலாம். இத்தடைகள் மனத்தளவிலும் வருதல் கூடாது.

5. எதிர்பாராத நிலையிலும் காலந் தவறியும் பெண்களின் உடல் இயற்கை மாற்றத்தால் அசுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இவற்றையும் மனதில் கொள்ளவேண்டும். இவையெல்லாம் தெரிந்துதான் பெரியோர்கள் ஐயப்ப வழிபாட்டில் பெண்கள் மலைக்கு வந்து சிரமப்படுவதைத் தவிர்த்து வைத்திருந்தார்கள். எனவே ஒன்பது வயதிற்கு உட்பட்ட, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கோயிலுக்கு வந்து தரிசிப்பதே முறையான வழிபாடாகும். நடைபாதைக் கடைகளில் இளம்பெண்கள் வியாபாரம் செய்வதையும் தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கடைகளுக்குச் செல்வதைச் சாமிமார்கள் தவிர்ப்பதைத் தெரிந்தால் வியாபாரிகள் இந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள். ஐயப்ப வழிபாட்டில் வழிவழியாக நம் பெரியோர்கள் கடைபிடித்து வந்த விரதமுறைகளையே நாமும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் வசதிக்காக, வாய்ப்பிற்காக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்கள் மாசுபடத் தொடங்கி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...