சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆதிக்க நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகளை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசு சில்லறை வர்த்தகத்திலும் அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்துள்ளது. ஒரே ஒரு பொருளை மட்டும் விற்பனை செய்யும் அந்நிய நிறுவனங்கள் 100 சதவிகிதம் நேரடி முதலீடு செய்யலாம் என்றும், பல்வேறு பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்கள் 51 சதவிகிதம் முதலீடு செய்யலாம் என்றும் அறிவித்ததன் மூலம் வளர்ந்த நாடுகளில் உள்ள பகாசூர கம்பெனிகள் இந்தியாவில் புகுந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க இந்திய அரசு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இத்தகைய முடிவினால் சிறு வியாபாரிகளின் வாழ்வு சூறையாடப்படும் என்பதில் சந்தேகமில்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் பெரிதும் பாதிக்கப்படும். இது நம்முடைய பொருளாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரித்து கோடிக் கணக்கான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திவிடும். ஓர் அரசின் பொருளாதாரக் கொள்கை அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலை வாய்ப்பைத் தருவதாகவும், கௌரவமான ஊதியத்தை பெறுவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக இந்திய அரசு இந்த நடவடிக்கையின் மூலம் சாதாரண மக்களின் சொற்ப வாழ்வையும் பறிப்பதாக உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
அந்நிய நாட்டு முதலீடு நம்முடைய நாட்டில் கூடவே கூடாது என்று நான் கூறவில்லை. அந்நிய நாட்டு முதலீடு ஒன்று நம்முடைய நாட்டின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இங்கேயே உற்பத்தி செய்கிற பொருளை வாங்கி, இங்கேயே விலைக்கு விற்கும் வியாபாரம் தொன்று தொட்டு நாம் செய்து வருவதே தவிர, நமக்கு தெரியாதது அல்ல.இரண்டவாது அந்நிய நாட்டு மூலதனம் நம்முடைய நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாக இருந்தால் வரவேற்கலாம்.
ஆனால், இதுவோ வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு பதிலாக, இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறிக்கின்ற ஒன்றாகும். ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் இந்த அந்நிய நாட்டு மூலதனம் தேவையற்றது மட்டுமல்ல, தீதானதும் கூட. ஏற்கனவே வர்த்தகம் என்ற பெயரால் வந்த கிழக்கிந்திய கம்பெனிதான் இந்தியாவை 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி சுரண்டியது. அதே வகையில் இன்றும் வரலாறு திரும்புகிறது என்று சொல்வதைப் போல மீண்டும் ஆதிக்க நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகளை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுப்பதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment