வணிக வரித்துறையில் உள்ள அமலாக்கப் பிரிவினர், எந்த விதமான சோதனையிலும் ஈடுபடக் கூடாது, என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவின் முடக்கத்தால், ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
அமலாக்கப் பிரிவு முடக்கம் : வணிக வரித் துறையில் உள்ள முக்கியமான பிரிவு, அமலாக்கம். இதில் சுற்றும் படையினர், ஆய்வுக் குழுவினர் என, இரண்டு வகையினர் உள்ளனர். சோதனைச் சாவடிகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிடைக்கும் ரசீதுகள் மூலம், சம்பந்தப்பட்ட வணிகர், முறையாக வரி செலுத்துகிறாரா என சோதனை செய்வது, ஆய்வுக் குழுவினர் பணி.இவர்கள், ஆளுக்கொரு வணிகர் என்ற வகையில் பிரித்து, அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து, சரக்கு நடமாட்டத்தை கண்காணித்து, கோப்புகளைத் தயாரிப்பர். இவற்றை ஆய்வு செய்யும் இணை கமிஷனர், அவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் திடீர் சோதனை நடத்த அனுமதி அளிப்பார். இவ்வாறு, தமிழகம் முழுவதும் உள்ள, நான்கு கோட்டங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளின் மூலம், மாதந்தோறும், 10 கோடி ரூபாய் வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்; ஆண்டுக்கு, சராசரியாக 120 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், ஓராண்டாக எந்த ஆய்வும் இல்லாமல், அமலாக்கப் பிரிவின் குழு அலுவலர்கள், முடங்கிக் கிடக்கின்றனர்.
தொடரும் தடை உத்தரவு : தமிழகம் முழுவதும் இது போன்ற, 50 குழுக்கள் உள்ளன; சென்னையில் மட்டுமே, 25 குழுக்கள் உள்ளன. இவர்களை முடக்குவதற்கான முதல் உத்தரவு, கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்டது.சட்டசபைத் தேர்தல் வருவதை ஒட்டி, வணிகர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்பதற்காக, கடந்த ஆண்டு நவ., 12ம் தேதி, அனைத்து அதிரடி சோதனைகளையும் நிறுத்தும்படி, அப்போதைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து, வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, அத்தடை அப்படியே நீடித்தது. ரூ.120 கோடி இழப்பு : கடந்த செப்., 20ம் தேதி, வணிக வரித் துறை ஆணையர், அதிகாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவுமே இத்தகைய திடீர் சோதனைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுவிட்டார். ஆணையரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்காமல், எந்தச் சோதனையும் நடத்தப்படக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு மட்டும், வணிக வரித் துறைக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு அதிகரிக்கும் : ஆணையரின் இந்த உத்தரவு குறித்து, தென் மாவட்டத்தைச் சேர்ந்த வணிக வரித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்துவது, இத்துறையின் சட்டப்பூர்வ அதிகாரம். ஒரு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் சோதனை நடத்தும்போது, எச்சரிக்கை அடையும் அந்த பகுதி வர்த்தகர்கள் அனைவருமே, முறைப்படி வரி செலுத்த முயற்சிப்பர். இதனால், இயல்பாகவே வரி வருவாய் கூடுகிறது.புதிய அரசு வந்த பிறகு, பல்வேறு இன பொருட்களுக்கு, 5 சதவீதமாக இருந்த வரி, 14 சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால், வரி ஏய்ப்புகள் அதிகரிக்கும். இதைத் தடுக்க, திடீர் சோதனைகள் அதிகம் தேவை. அதே சமயம், தடை தகவல், வணிகர்களுக்கும் தெரிந்துவிட்டதால், இதுவரை தவறு செய்யாதவர்கள் கூட, "பில்' இல்லாமல் சரக்கு அனுப்ப துணிந்து விடுகின்றனர். இரு அரசுகளும் இணைந்து, ஒரே முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை. சோதனையின் பெயரால், சில அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பது, காரணமாக இருக்க முடியாது. முறைகேடு நடக்காத துறையே கிடையாது.எங்கேனும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களை தான் தண்டிக்க வேண்டுமே தவிர, மொத்தத்தையும் தடை செய்து விடுவது, சரியான நடைமுறையாக இருக்காது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment