கோல்கட்டா டெஸ்ட் போட்டியில், தவறவிட்ட "நூறாவது சதம்' என்ற சாதனையை, சச்சின் தனது சொந்த மண்ணான மும்பையில் எட்டுவார் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே சச்சினுக்கு கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். இதற்குப் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லி அல்லது கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் சச்சின் இந்த இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த போட்டிகளில் சச்சின் 7, 76 மற்றும் 38 ரன்களில் அவுட்டானார். இதனால், வரும் 22ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், எப்படியும் சாதிப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் இம்முறை ஒரு விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள, வான்கடே மைதானம் சச்சினின் சொந்த ஊரான மும்பையில் உள்ளது. இதனால் நூறாவது சதம் குறித்து வழக்கத்துக்கு மாறாக அதிக பர பரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதேநேரம், இம்மைதானத்தில் சச்சின் பங்கேற்ற 8 டெஸ்ட் போட்டியில், ஒரு முறை (டிசம்பர் 1997, இலங்கை) மட்டுமே சதம் அடித்துள்ளார். இதனால், சச்சினுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், தனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்கிறார் சச்சின். இதுகுறித்து அவர் கூறியது: கிரிக்கெட் வாழ்க்கையில் 22 ஆண்டுகள் நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எனது தேசத்துக்காக, முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதிக உற்சாகத்தை தந்துள்ளது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
எனது நூறாவது சதம் குறித்து தான் எல்லோரும் பேசுகின்றார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாவதால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஏனெனில், இது குறித்தெல்லாம் நான் நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. நூறு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நம்பர் தான். சிறப்பான முறையிலான ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்துவது குறித்து தான் எப்போதும் நினைப்பேன். இதுபற்றிய எண்ணத்தில் இருந்து விடுபட்டு "ரிலாக்சாக' இருக்க விரும்புகிறேன். எதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு, அதற்காக அவசரம் காட்ட விரும்பவில்லை. எனது இயல்பான ஆட்டத்தில் மட்டுமே, கவனம் செலுத்த முயற்சிப்பேன். மற்றபடி, நடப்பவை தானாகவே நடக்கும். ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் 90 வது சதம் அடித்த போது, யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. 99வது சதம் அடித்த போதும், எவரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 100வது சதம் குறித்து மட்டும், ஏன் இவ்வளவு பேசுகின்றனர் என்று, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவ்வாறு சச்சின் கூறினார்.
No comments:
Post a Comment