பழைய தேர்வு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசின் இம்முடிவிற்கு மாணவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக இருந்த தேர்வு முறையை மாற்றி புதிய தேர்வு முறையை நடைமுறைப்படுத்தியது. ஒரு பாடத்தில் இரண்டு தாள்களிலும் தலா 50 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என்ற தேர்வு முறையால் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், முதலாம் ஆண்டு வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் இந்த புதிய தேர்வு முறையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், சென்னை மெமோரியல் ஹால் முன்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு, புதிய முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் சுகாதாரத் துறை அமைச்சர் மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விவாதித்த முதலமைச்சர், மீண்டும் பழைய தேர்வு முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment