பீகார் மாநிலத்தில் ஐஐடி-ஜேஇஇ தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக
பயிற்சி அளிக்கும் வகையில் இயங்கி வரும் சூப்பர் 30 பயிற்சி மையத்தின்
நிறுவனரான ஆனந்த் குமார், உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில்
இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும்
மோனாகல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியான
உலகின் சிறந்த 20 ஆசிரியர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆனந்த்
குமார் ஒருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
ஏழை மாணவ சமுதாயத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர் என்று
அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் நடிகர்களை விட
மிகவும் புகழ்பெற்றவராக ஆனந்த் குமார் உள்ளார் என்றும் பத்திரிகை
கூறியுள்ளது.பீகாரில் உள்ள ஏழை மாணவர்கள் தற்போது ஐஐடியில் படிக்கிறார்கள் என்றால்
அதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக ஆனந்த் குமார் உள்ளார். ஐஐடி-ஜேஇஇ
தேர்வுகளில் பீகார் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முக்கிய இடம் பெறுவது
சர்வதேச அளவில் மீடியாக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சூப்பர் 30 பயிற்சி மையம், ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு
இலவசமாக தங்குமிடம், உணவு கொடுத்து பயிற்சி அளிக்கிறது. தற்போது சூப்பர் 30
மாணவர்கள் அனைவருமே ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்
என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.சர்வதேச அளவில் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி
தெரிவிக்கும் ஆனந்த் குமாரை பல்வேறு வெளிநாட்டு மீடியாக்கள் தொடர்பு கொண்டு
இலவச பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துக்களை கேட்டு
வருகின்றன.
இவர் தற்போது சர்வதேச அளவில் புகழ் அடையவில்லை. ஏற்கனவே பல வெளிநாட்டு
பத்திரிகைகளில் இவரது புகழ் பாடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், இவரது இலவசப்
பயிற்சி மையத்தை அடிப்படை கதையாக வைத்து இரண்டு திரைப்படங்கள் கூட வெளியாகி
விருதுகளை வென்றுள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் ஆனந்த் குமாரால்,
முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்த வழியில்லாமல் உயர் கல்விக் கனவு
தகர்ந்து போனது. அந்த தோல்வியை மற்ற ஏழை மாணவர்களது வெற்றிப் படிகட்டுகளாக
மாற்றினார். 2002ம் ஆண்டில் சூப்பர் 30 என்ற இலவச பயிற்சி மையத்தைத்
துவக்கினார். 24 மணி நேரத்தில் 16 மணி நேரங்களை கல்விக்காகவே செலவிட்டார்.
இலவச பயிற்சி மையத்தைத் துவக்கி பல ஏழை மாணவர்களின் சாதனைக்கு துணையாக
நிற்கின்றார்.
No comments:
Post a Comment