ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா ஹஸாரே கடைசியாக படம் பார்த்தது 1970-ல்தான். அதன் பிறகு அவர் சினிமாவே பார்த்ததில்லையாம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதல் முறையாக ஒரு சினிமா பார்க்கிறார். அதுவும் தமிழ்ப் படம், சென்னையில். படத்தின் பெயர் முதல்வர் மகாத்மா. காமராஜ் படத்தை இயக்கிய அ பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படம், மகாத்மா காந்தி இப்போது முதல்வராக இருந்தால் பிரச்சினைகளை எப்படி எதிர்நோக்கியிருப்பார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு விடை சொல்கிறது. இந்தக் கதையை கேட்ட உடனே படம் பார்க்கச் சம்மதித்துவிட்டாராம் அன்னா ஹஸாரே. வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) முதல்முறையாக சென்னை நகருக்கு வரும் அவர், தனது மற்ற பணிகளுக்கு நடுவில் இந்தப் படத்தைப் பார்க்கவும் நேரம் ஒதுக்கியுள்ளார். அவருடன் பத்திரிகையாளர்களும் சேர்ந்து முதல்வர் மகாத்மாவைப் பார்க்கிறார்கள். நுங்கம் பாக்கத்தில் உள்ள ஃபோர்பிரேம்ஸ் அரங்கில் இந்த விசேஷ காட்சி நடக்கிறது!
No comments:
Post a Comment