கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது. நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
காலை 9 மணியில் இருந்தே கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அணி, அணியாக வரத்தொடங்கினார்கள். இந்தப் பேரணிக்கு யாரும் திட்டமிடவில்லை. மக்களே தாங்களாக முன்வந்து கூடி பேரணியை நடத்தினர். மேலும் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு கடையும், வர்த்தக நிறுவனமும் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் பெண்களையும், தமிழர்களையும் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளின் செயலால் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகள் போல வந்த தமிழர்களை தேவாரம் பகுதியில் தங்க வைத்து பொதுமக்களே உணவு கொடுத்து ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
இந்த செயல்கள் கம்பம் பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய ஆவேசத்துடன் இன்று கம்பத்தில் திரண்ட இந்த மக்கள் கூட்டம் கேரள அரசையும், தமிழர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்து ஆவேச கோஷமெழுப்பினர். மிகப் பெரிய அளவில் மக்கள் திரண்டிரு்பபதால் கம்பத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மக்கள் கூட்டம் அப்படியே கேரளாவை நோக்கி நகரக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment