பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், யார் யாரை மிரட்டிப் பணம் பறித்தார் என்பதற்கு என்னிடம் டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன'' என்று, முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.
கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில், இளம்புயல் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசியதாவது: நான் 1996ல் தான் கட்சிக்கு வந்தேன் என்றும், எப்படி எனக்கு பணம் வந்தது என்றும் கேட்டு, துரோகி எனவும் பழிசுமத்துகின்றனர். ராமதாஸ் 1990ல், டி.எஸ்.ஈ.1850 என்ற ஒரு அம்பாசிடர் கார் தான் வைத்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகளிடம், அவர் பெட்டி ஏதும் வாங்கவில்லை எனக் கூறட்டும். நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது வசூல் செய்தது இல்லை. கட்சி நிர்பந்தத்திற்காக சிலர் வசூல் செய்தனர். அவர்களும் இப்போது என்னிடம் இல்லை. கடந்த தேர்தலில் ஜி.கே. மணி, நான், குரு தவிர, மற்ற 27 பா.ம.க., வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடம், 2 கோடி சொத்துக்கு பவர் எழுதி வாங்கப்பட்டது. தகவல் உரிமைச் சட்டத்தில், 27 வேட்பாளர்களின் சொத்துக்கள் கேட்டால், யாருடைய பெயருக்கு மாறியுள்ளது எனத் தெரியும்.
ராமதாஸ், யார் யாரை மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கு டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன. அரசியல் நாகரிகம் கருதி, அமைதி காத்து வருகிறேன். விரைவில் என் அமைதியை கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வன்னியர் சங்கத்திலும், தி.மு.க., விலும் இருந்த நான், பின் பா.ம.க., வுக்கு மாறினேன். என்னை தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., போன்ற கட்சிகள் அழைத்தன. ஆனால், நான் செல்லவில்லை. புதிய எழுச்சியுடன், வரும் தை மாதம் ஜாதி, மதம் கடந்து, உலகத் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவக்கப்படும். அப்போது, கட்சி கொள்கைகள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment