மரண தண்டனை கைதியின் கருணை மனுவை பரிசீலிக்க, மத்திய அரசு பல ஆண்டு கால அவகாசம் எடுத்து கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. டில்லியில், கடந்த 93ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் ஒன்பது பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2002ல் மரண தண்டனை அறிவித்தது. இதை தொடர்ந்து தேவேந்தர் பால் சிங், ஜனாதிபதிக்கு 2003ல் கருணை மனு செய்தார். இதுநாள் வரை இந்த மனு பரிசீலனையில் உள்ளது. இந்த கருணை மனுவை விரைவில் பரிசீலிக்கக்கோரி, தேவேந்தர் பால் சிங் சார்பில் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. "ஜனாதிபதியிடம் உள்ள கருணை மனுவை விரைவில் பரிசீலிக்கும் படி வற்புறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி உயர் அதிகாரம் படைத்த ஜனாதிபதி, கருணை மனுவை பரிசீலிக்க காலக்கெடு ஏதும் கிடையாது' என, மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கருணை மனு தொடர்பான ஆவணங்களை உள்துறை செயலர்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கருணை மனு தொடர்பான ஆவணங்களை, மூன்று நாட்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டு காலம், எட்டு ஆண்டு காலம் எடுத்து கொள்வது வருத்தம் அளிக்கிறது' என்றது.
No comments:
Post a Comment