|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க யு.எஸ். முடிவு!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் மார்ச் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் ஒன்று சேர்ந்து தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

இலங்கையில் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மரியா ஒட்டேரா மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் ஆகியோர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானம் குறித்து ராஜபக்சேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைக் கொடுமைகள் தொடர்பாக ராஜபக்சே அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தரப்பில் ராஜபக்சேவிடம் இருவரும் வலியுறுத்தினர்.

அலட்டிக்காத ராஜபக்சே அமெரிக்காவின் இத்தகைய கண்டிப்பான அணுகுமுறையை எதிர்பார்க்காத ராஜபக்சே, சற்றும் அலட்டிக் கொள்ளாமல், "ம். நான் ஏற்படுத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி "ஆராய்ந்து" வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அக்குழுவின் பரிந்துரைகளை ராஜபக்சே உடனே நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் இதனால் சர்வதேச நாடுகளின் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் ராஜபக்சேவை எச்சரித்துள்ளனர். பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் கைவசம் வைத்திருக்கும் திட்டங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தமிழர்களின் கட்சிகள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் கொண்டுவரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. போருக்கு உதவி செய்த இந்தியா, போருக்குப் பின்னும் இலங்கை தமது நட்பு நாடாக இருக்கும் என எதிர்பார்த்தது. ஆனால் சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் எதிர் முகாம்களோடு கை கோர்த்த ராஜபக்சே, இந்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எந்த ஒரு உருப்படியான அரசியல் தீர்வையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் மரியா ஒட்டேரியா மற்றும் ராபர்ட் பிளேக்குடன் வாசிங்டனில் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதேபோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியையும் மத்தாய் சந்தித்துள்ளார். இச்சந்திப்புகளின் போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பது என்று இருநாட்டு பிரதிநிதிகளும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனையடுத்தே அமெரிக்க் பிரதிநிதிகள் தமது கடுமையான நிலைப்பாட்டை இலங்கையிடம் நேரில் தெரிவிக்க பயணித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றமும் கிடுக்குப் பிடி ராஜபக்சே உருவாக்கிய நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்கிறது அமெரிக்கா. இதனிடையே இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வின் வல்லுநர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. "இலங்கையின் இறுதிப் போரின்போது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டமைக்கும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டமைக்கும் நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருப்பதால் அது பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்'' என்பது ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கை.ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானது ஐரோப்பிய நாடாளுமன்றம். இலங்கையில் அமெரிக்க பிரதிநிதிகள் நெருக்கடி கொடுத்த நிலையிலே ஐரோப்பிய நாடாளுமன்றமும் ராஜபக்சேவுக்கு எதிராக அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உள்நாட்டில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும் சீனா நமக்கு ஆதரவாக இருக்கும் என திடமாக ராஜபக்சே நம்புகிறார்.இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு இலங்கை அரசாங்கம் பணிந்துவருகிறது. இலங்கையை மேற்குலக நாடுகளிடம் ராஜபக்சே மண்டியிட வைக்கிறார் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஜே.வி.பி. கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை மண்ணில் இருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் கருத்து தெரிவிக்க எப்படி தைரியம் வந்தது என்று ஜே.வி.பி. பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...