ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்ற பிறகு அங்கேயே பணிபுரிவதற்கான விசாவை ரத்து செய்வதாக ஏற்கெனவே அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதில் இந்தியர்களே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாயினர்.இந்நிலையில் இங்கிலாந்தில் பணி புரியும் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அவர்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிவிட வேண்டும் என்ற புதிய விதியை குடியேற்ற அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஆண்டு வருமானம் அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியர் போன்ற வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கிற இங்கிலாந்து நாட்டவர், தங்களது மனைவிக்கு ஆண்டு வருமானம் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் என்று குறிப்பிட்டு விசா பெறுகின்றனர். இத்தகையோர் இங்கிலாந்து அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதை தடுக்கும் வகையில் இப்புதிய விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.புதிய குடியேற்ற விதிகள் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் டாமின் க்ரீன் இதனை சுட்டிக்காட்டடுள்ளார்.
இங்கிலாந்து நாட்டவரை திருமணம் செய்யக் கூடியவர் சுயமாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று குடியேற்ற விதிகளில் கட்டாயமாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.மேலும் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்வோருக்கு ஆண்டு வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க உள்ளதாகவும் அமைச்சர் க்ரீன் தெரிவித்தார்.இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்ட்ஸில் இருந்து 49 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டவர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment