உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை விசுவரூபம் எடுத்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உணவுப் பொருட்கள் விலையேற்றம் மற்றும் பருவநிலையில் அதீத மாற்றங்கள் என பெரும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக தண்ணீர் பேரவை, 1997ம் ஆண்டில் இருந்து மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் பிரச்னைகள் குறித்த கூட்டத் தொடரை நடத்துகிறது. பேரவையின் ஆறாவது கூட்டத் தொடர், பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் நகரில் நேற்று துவங்கியது. வரும் 17ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடக்கிறது.இத் தொடரில், 180 நாடுகளின் பிரதிநிதிகள், 140 அமைச்சரக பிரதிநிதிக் குழுக்கள், 800 வல்லுனர்கள், 25 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத் தொடரை முன்னிட்டு, உலகளவில் உருவாகியுள்ள தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:வரும், 2050ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை தற்போதைய, 700 கோடியில் இருந்து, 900 கோடியாக அதிகரிக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு, இறைச்சி சார்ந்த உணவுப் பழக்கம் அதிகரிப்பு இவற்றால், 2050ல், 70 சதவீதம் வரை உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
தற்போதைய உற்பத்தி வழிமுறைகள் மூலம், எதிர்காலத்தில் உலகளவிலான விவசாய உற்பத்தியை, 20 சதவீதம் மட்டுமே அதிகரிக்க முடியும்.தற்போதைய விவசாயத்தில், சராசரியாக 70 சதவீதம் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் தண்ணீர் 44 சதவீதமும், பின்தங்கிய நாடுகளில் 99 சதவீதமும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் கடந்த, 50 ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான தண்ணீர் குடிநீருக்காக வினியோகிக்கப்படுகிறது. சில இடங்களில், புதுப்பிக்க முடியாத நிலத்தடி நீர் வளங்கள் மிக மோசமான நிலையை எட்டி விட்டன.
விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரத் தேவை இவற்றின் அதிகரிப்பாலும், மோசமான நீர் மேலாண்மையாலும், நல்ல தண்ணீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.அதேநேரம் பருவநிலை மாற்றம் உண்மையான விசுவரூபம் எடுக்கக் கூடிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது. முறையான திட்டம், அமலாக்கம் இல்லை என்றால், லட்சக்கணக்கான மக்கள், பசி, நோய், மின் பற்றாக்குறை மற்றும் வறுமையில் விழுவதை நம்மால் தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment