கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் தனது படத்தை அனுமதியின்றி வெளியிட்ட "சண்டே டைம்ஸ்' பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக பாலிவுட் நடிகை நூபுர் மெஹ்தா மிரட்டியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த "சண்டே டைம்ஸ்' பத்திரிகை, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேனுக்கு மந்தமாக ஆட, ரூ. 35 லட்சம், பவுலர் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் பணம் கொடுப்பதை அம்பலப்படுத்தியது.
கடந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் மோதிய உலக கோப்பை அரையிறுதியில் சூதாட்டம் நடந்ததாக தெரிவித்தது. வீரர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை சூதாட்ட புக்கிகள் பயன்படுத்தியதாக படத்துடன் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. தற்போது "சண்டே டைம்ஸ்' வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முகத்தை மறைத்து வெறும் உடலை மட்டுமே இப்படம் காட்டுகிறது. இது, தனது படம் தான் என பாலிவுட் நடிகை நூபுர் மெஹ்தா அடித்துக் கூறுகிறார். அனுமதியின்றி வெளியிட்டு இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து நூபுர் மெஹ்தா கூறியது: படத்தில் இருப்பது நான் தான். ஆனால், புகாரில் உண்மையில்லை. விளம்பரம் தேடுவதற்காக எனது படத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். எனக்கு சூதாட்டத்தில் எவ்வித தொடர்பும் இல்லை. கிரிக்கெட் வீரர்களுடன் உறவும் இல்லை. எனது பெயருக்கு "சண்டே டைம்ஸ்' பத்திரிகை களங்கம் ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனக்கு தொடர்பு இருந்தால், ஆதாரத்துடன் வெளியிட்டிருக்க வேண்டும். பாலிவுட் மற்றும் இந்திய நடிகைகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஏதோ ஒரு நடிகையின் உருவ மாதிரி என்ற அடிப்படையில் வெளியிட்டிருந்தாலும் கூட, எனது அனுமதியை பெறவில்லை. இப்பிரச்னையில் சட்ட நடவடிக்கை எடுக்க, எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இவ்வாறு நூபுர் மெஹ்தா கூறினார்.
No comments:
Post a Comment