உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில்
இதுவரை சுமார் 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா தற்போது அலகாபாத்தில்
நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் பல லட்சம்
பக்தர்களும் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி
சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில்
கோடிக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர்.
இந்த கும்பமேளாவுக்கு வந்து கூட்ட நெரிசலில் காணாமல் போனோரை பற்றி ஒலி
பெருக்கி மூலம் அறிவித்து குடும்பத்தினருடன் இணைத்து வைக்க உதவி மையங்கள்
அலகாபாத் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையங்கள்
அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன. இந்த உதவி மையங்கள்
தெரிவித்திருக்கும் தகவலின்படி இதுவரை 3 லட்சம் பேர் காணாமல்
போயிருக்கின்றனர்.
மவுனி அமாவாசை நாளான நேற்று மட்டும் சுமார் 3 கோடி பேர் திரிவேணி
சங்கமத்தில் புனித நீராடினர். இவர்களில் 97 ஆயிரம் பேர் காணவில்லை. இப்படி
கும்பமேளா காலங்களில் இதுவரை தொலைந்தோர் எண்ணிக்கை சுமார் 16 லட்சம் பேர்
இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இன்னும் பலர், கும்பமேளா நடைபெறும் புண்ணிய தலங்களில்
தங்கள் வீட்டு முதியவர்களை கொண்டுவந்து விட்டு விடும் சம்பவங்களும்
நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment