|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2011

வற்றிய தண்ணீரும்... வற்றாத கண்ணீரும்: இன்று உலக தண்ணீர் தினம்


சிறைப்பட்டபோதும், சேவகன் ஒருவன் தாமதித்து கொண்டு வந்து இடது கையால் கொடுத்த குவளை தண்ணீரைக் குடிக்காமல், மானம் பெரிதென உயிர்விட்டான் சேரன் கணைக்கால் இரும்பொறை. இன்று அவன் இருந்திருந்தால், நம் தேசத்தின் தண்ணீர் கொள்கையை பார்த்தே மாண்டு போயிருப்பான்.

விருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க குடிநீரைப் பருகிப்பார் என விருந்தோம்பிய கோவையில், தண்ணீர் போத்தல்கள் (பாட்டில்) கடைகளில் தொங்குவது, சிறுவாணி ஆறே தூக்கில் தொங்குவது போல் தோன்றுகிறது; காவியங்கள் சொன்ன காலத்தை கற்பனை செய்தால், கண்களின் ஓரங்களில் கண்ணீர் திரள்கிறது.முரண்களை அரங்கேற்றிய முடிகளாலும் (அரசு), பொறுப்பற்ற குடிகளாலும் (மக்கள்), வளம் பெருக்கிய ஆறுகள், வற்றி வறண்டு இன்று கழிவுநீர் கால்வாய்களாகி விட்டன. வரப்பெடுத்த வயலையும், நுரை பொங்கிய நதியையும், தேக்கிய நல் வாய்க்கால்களையும் பாரதிதாசனின் பாடல்களில் மட்டுமே காண முடிகிறது.

 ஐம்பதுகளை தாண்டியவர்களுக்கு வேண்டுமானால், பள்ளம், படுகையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குளித்தது நினைவிருக்கலாம். முப்பாட்டன் குடித்த ஆறு, பாட்டன் குளித்த ஆறு, தந்தை பாதம் பதித்த ஆறு, இன்றைய தலைமுறைக்கு என்னவாக இருக்கிறது? முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும், குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன; சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும், அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத் தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும்? பூமியெங்கும் இயந்திரமத்துகளால் ஆழ்குழாய் கிணறுகள் துளையிடப்படுவதும் அப்படி தானே?
எதிர்காலச் சந்ததியினருக்காக சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை அப்பட்டமாக திருடுகிறோம். பணமும், அதிகார போதையும், விளம்பர புகழும் தண்ணீரின் அத்தியாவசியத்தை உணராமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்தை தண்ணீராய் செலவழித்த காலம் போய், தண்ணீருக்காக பணத்தை செலவழிக்கிறோம்.நமது தலைமுறை வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஆறு என்பதை எப்படி காட்டப் போகிறோம். ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெறலாம். வரும் தலைமுறை அக்கேள்விக்கு எப்படி விடையெழுதும்; முன்பொரு காலத்தில் ஆறுகள் இருந்தன என்றா?

ஆற்றுமணல் பணமாக மாறலாம்; ஆனால், காகிதப் பணம் குடிநீராக மாறும் ரசவாத வித்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஒரு தலைமுறை கேட்கும், எங்களுக்கான தண்ணீர் எங்கே என்று; உங்கள் வீட்டின் பிஞ்சுக் குழந்தையின் முகம் பாருங்கள். பரிதாபத்திற்குரிய அந்த தலைமுறைக்கு சில நீர் ஆதாரங்களையாவது விட்டுச் செல்லுங்கள். நீங்கள் மனிதராய் வாழ்ந்ததற்கு அதுவாவது ஆதாரமாய் இருக்கட்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...