|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 June, 2011

அமெரிக்காவில் 17ம் தேதி முதல் 10வது தமிழ் இணைய மாநாடு


10வது தமிழ் இணைய மாநாடு, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. ஜூன் 17ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 10 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சிறுவர் திருக்குறள் போட்டி நடக்கிறது. கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் குறுந்தகடுகளும் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, செர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படிக்கின்றனர். இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்துள்ள விதம், தமிழ் மென்பொருள்கள் பற்றி விவாதிக்கின்றனர்.

மேலும் மு.அனந்தகிருட்டினன், பொன்னவைக்கோ, பென்சில்வேனியா பல்கலை தெற்கு ஆசிய துறைத்தலைவர் தாவூத் அலி, பேராசிரியர் ஹெரால்டு ஷிப்மன், பேராசிரியர் அண்ணாமலை, பிரான்சு பேராசிரியர் ஏ.முருகையன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு, கனடா பேராசிரியர் செல்வகுமார், ஈழத்தின் சிவா அனுராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த தகவலை அமெரிக்கா பன்னாட்டுக்குழு தமிழ் இணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் தமிழ் இணையத்துறையில் முன்னோடியுமான முனைவர் மு.இளங்கோவனும் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளார். இணையவழித் தமிழ்ப் பாடங்கள் என்ற தலைப்பில் அவர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறார்.

இன்றைக்கு வகுப்பறையில் நடக்கும் தமிழ்ப்பாடங்கள் எதிர்காலத்தில் இணையத்தில் நடைபெற உள்ளன. இன்றும் நூற்றுக்கணக்கான இணைய தளங்களில் தமிழ்ப்பாடங்கள் உள்ளன. இலவசமாகவும், கட்டணம் கட்டியும் இந்தப் பாடங்களைப் படிக்கலாம். வெளிநாட்டு மாணவர்களும் தமிழ்மாணவர்களும் தமிழ் படிக்க உதவும் வகையில் உள்ள இந்தப் பாடங்களில் தமிழ் அகரவரிசை, பேச்சுத்தமிழ், உரையாடல், தமிழர் பண்பாட்டுக்கூறுகள் உள்ளன.

திரைப்படங்களில் இடம்பெறும் இலக்கியப்பாடல்கள் கொண்டு இணையதளங்களில் தமிழ்ப்பாடங்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களில் உள்ள நிறை குறைகளை எடுத்துக்காட்டி முழுமையான தமிழ்ப்பாடங்களை எப்படி வடிவமைப்பது என்று இளங்கோவன் தம் ஆய்வுக்கட்டுரையில் விளக்கவுள்ளார். இளங்கோவனின் தமிழ் இணையப் பணிகளைப் பாராட்டும் வகையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா அமைப்பு இந்த ஆண்டு நடத்தும் மூன்று நாள் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக இவரை அழைத்துப் பாராட்டவுள்ளது.

தெற்குக் கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ள்ஸ்டன் நகரில் இந்த ஆண்டு நடைபெறும் பெட்னா விழாவில் இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளார்.
மேலும் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், நியூசெர்சி, வடக்குக் கரோலினாவில் நடைபெறும் தமிழ் விழாக்களிலும் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றுச் சிறப்புரையாற்ற உள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...