|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 June, 2011

வாஞ்சிநாதன் நூற்றாண்டு நினைவு தினம்!

சுதந்திர போராட்ட தியாகி வீரர் வாஞ்சிநாதன் நூற்றாண்டு நினைவு தினம் வரும் ஜூன் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை செங்கோட்டையில் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தமிழகத்தில் முதன் முதலாக ஆயுதம் ஏந்திய மாவீரன் வாஞ்சிநாதன் செங்கோட்டையை சேர்ந்தவர். சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17 – ம் நாள் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டு கொன்று விட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டு வீரமரணம் அடைந்தார் வாஞ்சிநாதன்.

இதனையடுத்து ஆண்டுதோறும் ஜூன் 17ம் தேதி செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வாஞ்சிநாதன் தனது இன்னுயிரை தியாகம் செய்து இந்தாண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி அவரது நினைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், தென்காசி எம்பி லிங்கம், கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் மற்றும் ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், உள்ளாட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வீரவாஞ்சிநாதனுக்கு மரியாதை, செலுத்தி அவரது தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.

இந்நிலையில் செங்கோட்டை முத்துசாமி பூங்கா அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாஞ்சிநாதன் மணி மண்டப பணிகள் வேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக்கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.

இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பை பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது. அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...