நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகிகள் ரவிக்குமார், ம.செ.சிந்தனைச்செல்வன், பெ.ஆற்றலரசு, வெ.கனியமுதன், புதுவை பாவாணன், வன்னிஅரசு உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், கட்சியின் இப்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டன.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க உலகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கிற வகையில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் சுமார் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது. இனப்படுகொலைக் குற்றவாளியான ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர ஐ.நா.பேரவையை இக்குழு வலியுறுத்துகிறது. முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு பெருந்தன்மையோடு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தை ஜூலை 2-ம் தேதி கூட்டுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment