பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அளவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் மாணவர்கள் உள்ள விவரத்தை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசிடம் சமர்ப்பித்தனர். அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் "எல்காட்' அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் உரையில், இலவச லேப்-டாப் வழங்குவதை அரசு உறுதி செய்தது. இலவச லேப்-டாப் தயாரிப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: முதல் கட்டமாக, 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்ய, சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11. அதற்கான வைப்புத் தொகை 20 லட்சம். கடைசி தேதியன்று மாலை, டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படுகின்றன. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, லேப்-டாப் கொள்முதல் செய்வதற்கான அனுமதி உடனே வழங்கப்பட மாட்டாது. முதலில், தொழில்நுட்ப ரீதியாக டெண்டர் பரிசீலிக்கப்படும். இதில், அந்நிறுவனங்கள், அரசு விதித்துள்ள தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அடுத்த கட்ட டெண்டருக்கு தேர்வு செய்யப்படும். முதல் டெண்டரில் தகுதிபெற்ற நிறுவனங்களுடன், அடுத்த கட்டமாக, விலை நிர்ணயம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஒத்துவரும் நிறுவனங்களுக்கு, லேப் -டாப் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் வழங்கப்படும். லேப்-டாப்பில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனம், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் முடியும் வரை இலவச சர்வீஸ் செய்து தர வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாதிரி லேப்-டாப்களை, "எல்காட்' நிறுவனத்திடம் இந்த மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எடை 2 கிலோ 700 கிராமுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழி விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி, சென்னை அண்ணாசாலையில் உள்ள "எல்காட்' நிறுவனத்தில், லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், லேப்-டாப் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களை, எல்காட் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
வசதிகள் அதிகம்: விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில் லேப்-டாப்பை இயக்கலாம். ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, ஒயர்லெஸ், "டிவிடி' ரைட்டர், வேர்டு, எக்சல் மற்றும் டேட்டா பேஸ் புரோகிராம்கள் மற்றும் கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய அளவிலான ஸ்கிரீன், 2 ஜி.பி., ரேம், 320 ஜி.பி., ஹார்டுடிஸ்க் இருக்கும்.
No comments:
Post a Comment