|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி? சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருக்கையில் ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் உடைமைகளை கொள்ளயைடித்துள்ளதாக குற்றம் சாட்டி, அவரது சொத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் தலைவர் பி. சங்கர் ராவ் கடந்த நவம்பர் மாதம் ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். சங்கர் ராவ் தற்போது அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சில தெலுங்கு தேச கட்சித் தலைவர்களும், ஒரு வழக்கறிஞரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி நிசார் அகமது கக்ரு மற்றும் நீதிபதி விலாஸ் வி அப்சல்புர்கார் முன் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகுவிப்பு குறித்து விசாரணை நடத்தி இன்னும் 2 வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர். அந்த அறிக்கை சமர்பிக்க்ப்பட்ட பிறகே இறுதி விசாரணை நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த விசாரணைக்கு அனைத்து அரசுத் துறைகளும் சிபிஐக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது குறித்து சங்கர் ராவ் கூறியதாவது, ஜெகன் மோகன் ரெட்டி அவரது தந்தை முதல்வராக இருக்கையில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொத்து குவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெகனின் வருமானம் ரூ. 11 லட்சம். ஆனால் அவரது தற்போதைய வருமானம் ரூ. 43,000 கோடி.

ஒய்.எஸ்.ஆர் பதவியில் இருக்கையில் ஜெகன் சுரங்கங்கள், நிலங்கள் ஒதுக்கீடு, உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் இருந்து பணம் சம்பாதித்தார் என்றார். அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஜெகனின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதியின் வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. திவேதி மேலும் கூறுகையில், ஜெகன் காங்கிரஸில் இருக்கும் வரை சங்கர் ராவ் எதுவும் கூறவில்லை. ஆனால் தற்போது தனிக் கட்சி ஆரம்பித்தவுடன் ஜெகனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக குற்றம்சாட்டுகிறார் என்றார்.

சங்கர் ராவ் தனது மனுவில் ஜெகன் உள்ளிட்ட 43 பேர், ஜகதி பப்ளிகேஷன்ஸ், இந்திரா டெலிவிஷன், பாரதி சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், பென்னார் சிமெண்ட்ஸ், கார்மெல் ஏசியா ஹோல்டிங்ஸ் லிட் மற்றும் சந்தூர் பவர் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர பிரதேசம் தொழில் உள்கட்டமைப்பு கழகத்துடன் சேர்ந்து ஹைதராபாத்தில் ஒரு குடியிருப்பு மற்றும் கோல்ப் கோர்ஸ் கட்டியதில் துபாயைச் சேர்ந்த ஈமார் ப்ராபர்டீஸ் முறைகேடு செய்துள்ளது என்ற சங்கர் ராவின் மனுவை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெகன் கடந்த நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மார்ச் மாதத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். கடந்த மே மாதம் நடந்த இடைத் தேர்தில் வெற்றிபெற்று மீண்டும் கடப்பா தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...