கலவரங்கள், போர்கள், வன்முறைச் சம்பவங்களின்போது பள்ளிகள் மற்றும்
மருத்துவமனைகள் குழந்தைகளுக்கான புகலிடமாக கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட
நேரத்தில், இந்த இடங்களை யாரும் தாக்கக் கூடாது. மீறி தாக்குவோர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
கூறியுள்ளது.
2 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் பள்ளி,
மருத்துவமனைகளைக் குறி வைத்து கொத்து எறிகுண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக
சின்னஞ் சிறார்களையும், வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும்
சிங்களப் படையினர் கொடூரமாகக் கொன்று குவித்தபோது இந்த விதிமுறைகளையும்,
எச்சரிக்கையையும் பிறப்பிக்காத ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இப்போது
இப்படிப் பேசியிருப்பது ஐ.நா.வின் இரட்டை வேட முகத்தை அம்பலப்படுத்துவதாக
உள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம்
கொண்டு வரப்பட்டு நிறைவேற்றியுள்ளனர். அதில், போர்க்காலங்கள், தாக்குதல்
நடைபெறும் இடங்களில், பள்ளிகள், மருத்துவமனைகளை யாரும் தாக்கக் கூடாது. அவை
குழந்தைகளுக்கான புகலிடமாக கருதப்பட வேண்டும்.
இதை மீறி அங்கு தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும்
பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சிறார்
உரிமைகளை மீறும் செயலும் ஆகும். எனவே இதுபோன்ற வன்முறைகளை யாரும்
அனுமதிக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், கற்பிக்கும் இடங்களையும்,
உடலைக் குணமாக்க வரும் இடங்களையும் யாரும் போர்க்களமாக்கக் கூடாது. அதை
அனுமதிக்க முடியாது என்று பட்டவர்த்தனமாக தனது இரட்டை வேடத்தை
அம்பலப்படுத்தினார்.
இலங்கையில், ஈழத்தில் பள்ளிகளையும்,
மருத்துவமனைகளையும் கொடூரமாக குண்டு போட்டு அநியாயமாக பச்சிளம்
குழந்தைகளையும், பெண்களையும், வயோதிகர்களையும் கொன்று குவித்த இலங்கை
காடையர்கள் மீது இதே பாதுகாப்பு சபையும், இதே பான் கி மூனும் என்ன
நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இன்று வரை விசித்திரமான மர்மமாகவே உள்ளது.
ஆனால் இப்போதாவது இப்படி ஒரு தீர்மானத்தைப் போட்டுள்ளனரே என்று ஆறுதல் அடைய
வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment