இதுவரை உலக அளவில் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பாகி வந்த இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரிலான லண்டன் சானல் 4 நிறுவனத்தின் டாக்குமென்டரி படம் இந்தியாவில் ஒளிபரப்பாகிய நிலையில் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போல மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது.
உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும், அப்பாவி மக்களுக்குத் துன்பம் விளைவிக்கப்பட்டாலும், உடனடியாக குரல் கொடுப்பது இந்திய அரசின் வழக்கம். ஏன், வடக்கு சூடானுடன் நடந்த 56 ஆண்டு கால கடும் ரத்தப் போராட்டத்தின் விளைவாக சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடானுக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித்தது, அங்கு நடந்த முதல் சுதந்திர விழாவில் கலந்து கொண்டது, தூதரகத்தையும் திறக்கவுள்ளது.
ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கையில், ஈழத்தில் நடந்த இன வெறிக் கொலையாட்டம் குறித்து இந்திய அரசு ஏனோ பெருத்த அமைதி காக்கிறது. அங்கு நடந்த ரத்த வெறியாட்டம் குறித்து அது கவலைப்படவே இல்லை. அது குறித்துப் பேசவே அது மறுக்கிறது.
இந்த நிலையில் ஈழப் போரின்போது நடந்த இனவெறி கொலை தாக்குதல் குறித்த காட்சிகளை, காண்போர் நெஞ்சைக் கதறடிக்கும் வகையிலான கொடூரக் காட்சிகள் அடங்கிய டாக்குமென்டரியை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தயாரித்து வெளியிட்டு உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்திய அரசுக்கு மட்டும் இதுவரை அதுகுறித்து கிஞ்சித்தும் உணர்வு வரவில்லை.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இந்த படு பாதக கொலை வெறிக் காட்சிகள், மூன்று நாட்களாக ஒளிபரப்பாகின. ஆனால் இதுவரை இந்தக் காட்சிகள் குறித்தோ, இந்த கொலை வெறித் தாக்குதல் குறித்தோ மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவி கடுமையாக விமர்சித்தும் செய்தி வெளியிட்டு விட்டது. அப்படியும் எந்த ஒரு அசைவையும் மத்திய அரசிடமிருந்து பெற முடியவில்லை. ஒருவேளை செத்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தானே என்று நினைத்து விட்டார்களோ என்னவோ...!
No comments:
Post a Comment