|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 July, 2011

இலங்கையை கண்டித்த பிரதமர் பேட்டி!

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்பின்னரே, பிரச்னையின் சூடு குறைந்தது. அதேநேரத்தில், அன்றைய பேட்டியில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் கூறியதை, பத்திரிகைகள் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை. அதுபற்றி பெரிய அளவில் செய்தி வெளியிடவும் இல்லை. அத்துடன், பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை அரசு தரப்பிலும் பதில் அளிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போர், 2009ல் முடிவுக்கு வந்தது. அதன்பின் இப்போது தான், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் வெளிப்படையாக அழுத்தமான கருத்தைக் கூறியுள்ளார். இந்திய - இலங்கை உறவு என்பது வெளிப்படையாக குறைகூறி விமர்சிப்பது என்பது கயிறுமீது நடப்பது போல தந்திரம் அதிகம் தேவைப்படும் விஷயம்.

பிரதமர் அளித்த பேட்டி விவரம்: இலங்கையைப் பொறுத்தவரை, சிங்களர்களின் இனவெறி ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்கு, தமிழர்கள் சமமான மதிப்பு, மரியாதையுடன் வாழ முடியவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். இலங்கை தமிழர் பிரச்னையில், தமிழகத்தை இந்திய அரசின் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.
இந்தியாவின் இலங்கை கொள்கை, இரு நாடுகளும் இணைந்து செயல்படும் விதமாக அமையவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்பது உண்மையே. தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், ராஜபக்ஷேயை கண்டித்தும் போடப்பட்ட தீர்மானம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய - இலங்கை உறவில் உள்ள நெருடல்களைப் புரிந்து கொண்டு இப்பிரச்னை குறித்து தீர்மானம் இயற்றியுள்ளனர். விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மை தான். ஆனாலும், அதனால் தமிழர்களின் பிரச்னை தீர்ந்து விடாது. இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஏராளமான மனக்குறைகள் உள்ளன. தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேட்டியில் தெரிவித்திருந்தார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பல நேரங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள், பிரதமர் தன் பேட்டியின் போது, இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ராஜபக்ஷே அரசை அவர் விமர்சித்தது மட்டும் அல்ல, தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையையும் ஏற்றதுடன், இந்த விஷயத்தில் அதிபர் ராஜபக்ஷே அத்துமீறலைக் கண்டித்த அமெரிக்க அரசின் தூதரகத் தகவலையும் பிரதமர் ஆதரித்திருப்பது முற்றிலும் வித்தியாசமானது. இந்த விமர்சனத்திற்கு ராஜபக்ஷே அரசும் பதில் அளிக்கவில்லை. இதிலிருந்தே, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையே என்பது தெளிவாகிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...