|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 July, 2011

விடியலை நோக்கி காத்திருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்!

நாட்டில் எந்த தொழிலும் ஏக போக ஆதிக்கம் செலுத்த, நம் ஜனநாயகம் அனுமதித்தில்லை. ஆனால், ஒரேயொரு தொழில் மட்டும், நம் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் உடைத்தெறிந்து, ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றால், அது கேபிள் இணைப்பு தொழில் மட்டுமே.தமிழக மக்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டு, குடும்ப ஆதிக்கத்தில் இருந்து அரசியலை விடுவித்தனர். ஆனால், அ.தி.மு.க., அரசு அமைந்த பின்னும் கேபிள், "டிவி' தொழில், ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறவில்லை. தமிழகத்தில் கேபிள், "டிவி' தொழிலில் பல லட்சம் ஆபரேட்டர்களும், அவர்களைச் சார்ந்துள்ள எண்ணற்ற குடும்பங்களும் ஏராளமான மனக்குமுறல்களுடன் உள்ளனர். அவர்களது குமுறல்கள், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.

அவர்களது மனக்குமுறல்களில் முக்கியமானவை:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமையும்போதெல்லாம், ஒரு குடும்ப சேனலின் ஆதிக்கம் தலைதூக்கி விடுகிறது. கேபிள் ஆபரேட்டர்களின் இணைப்பு எண்ணிக்கையை, அவர்களாகவே கூடுதலாக நிர்ணயித்து, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பணம் கட்டும்படி, கட்டாய வசூல் செய்கின்றனர்.


* கேபிள் ஆபரேட்டர்கள், "ஐயா... எங்களுக்கு இவ்வளவு இணைப்புகள் இல்லையே...' எனக் கூறி, நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கட்ட மறுத்தால், உடனே அந்த அந்த ஆபரேட்டர் தொழில் செய்யும் பகுதியில், உரிமம் கூட பெறாத ஒரு போட்டியாளரை உருவாக்கி, அவருக்கு இணைப்பு வழங்கி, உரிமம் பெற்ற ஆபரேட்டரை மிரட்டி, பணிய வைத்து விடுகின்றனர். அவர்கள் நிர்ணயித்த தொகையை கட்ட வேண்டிய சிக்கலான நிலைக்கு தள்ளி விடுகின்றனர். மீறி எதிர்ப்பவர்கள், அந்த தொழிலை விட்டே ஓடும்படி செய்து விடுகின்றனர்.


* தமிழ் பேசும் மாநிலத்தில், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேற்று மொழிச் சேனல்களை சர்வாதிகார முறையில் திணிப்பதுடன், அவற்றையும், தமிழ்ச் சேனல்களுக்கு இணையாக கணக்கிட்டு, கட்டணத் தொகை கட்ட வேண்டுமென்று கட்டாயமாக வசூலிப்பர்.


* புதிதாக எந்தச் சேனல் வந்தாலும், அவர்களை தங்கள் இணைப்பில் தருவதற்காக, கோடிக்கணக்கில் தொகை பெற்று, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற விஜய், ஜெயா போன்ற தமிழ்ச் சேனல்களை பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். தங்கள் குடும்ப சேனல்களுக்கு முக்கியத்துவம் தந்து, அதிக தொகை வசூலிக்கின்றனர். இதன்மூலம், மக்கள் அதிகம் பார்க்கும் சேனல்கள் என தங்கள் சேனல்களை காட்டி, "ரேட்டிங்' மோசடியை செய்கின்றனர்.


* கேபிள் இணைப்புகளை கையில் வைத்திருப்பதால், விளம்பரதாரர்களையும் தங்களை நாடி வரும்படி செய்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். இதிலும் திருப்தி அடையாமல், கேபிள் ஆபரேட்டர்களின் வருவாயில், 80 சதவீதத்தை உறிஞ்சும் வகையில் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர்.


* கேபிள் ஆபரேட்டர்கள் பணியவில்லை என்றால், போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு தொடர்வதும், தி.மு.க.,வினரை தூண்டிவிட்டு, கேபிள் ஒயர்களை துண்டித்து மிரட்டி வருகின்றனர்.


* இவர்களது குடும்ப சண்டை இருந்தபோது, சென்னையில் உருவான, "ஹாத்வே' நிறுவனம் இருந்த காலம், ஆபரேட்டர்களின் வசந்தகாலமாக இருந்தது. அவர்கள், "செட்டாப் பாக்சை' இலவசமாக அளித்து, அனைத்து சேனல்களுக்கும் முன்னுரிமை அளித்து, சிறப்பாக இணைப்பு தந்தனர். ஆனால், குடும்ப சண்டை முடிந்ததும், "ஹாத்வே'யை ஒழித்து விட்டனர். மீண்டும், பழைய அவல நிலை தொடர்கிறது.


* இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் இயல்புடையது கேபிள் தொழில். இடி இடிக்கும் போதெல்லாம், மின்சாதனப் பொருட்களான, டிரான்ஸ்மிட்டர், இன்ஜெக்டர், ஆம்ப்ளிபயர், கப்சர், ஒயர்கள் சேதமடைந்து விடும். சில நேரங்களில், இவற்றை முற்றிலும் புதிதாக மாற்ற வேண்டிய கட்டாய நிலை வரும். இதனால், பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.


* கேபிள் சேவையில், 24 மணி நேரமும், பகுதி அடிப்படையில் பணியாட்களை அமர்த்துதல், அவர்களுக்கு உணவு, உடை, ஊர்தி, பெட்ரோல் வழங்க அதிக செலவுகள் ஏற்படுகிறது.


* "டிடிஎச்' சேவை, ஆபரேட்டர்களை இத்தொழிலை விட்டே விரட்டும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. விழாக்கால சலுகை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி, சுயநலப் போக்கில் கட்டணத்தைக் குறைத்து, பொதுமக்களை வலையில் சிக்க வைக்கிறது. இதை புரிந்து கொண்டு, கொள்ளையடிக்கும் இச்செயலுக்கு, அரசு வரி நிர்ணயிக்க வேண்டும்.


* இந்த கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டு, அரசு கேபிள், "டிவி'யை துரிதமாக கொண்டு வர வேண்டும். அதை பொதுமக்கள் வரவேற்று, கண்டு களிக்கும் வண்ணம், கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அரசு கேபிளில் அனைத்து சேனல்களையும், "டிஜிட்டல்' முறையில் வழங்கி, சிறு, குறு ஆபரேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், அவர்கள் ஆர்வத்துடன் சேவையாற்றும் வகையிலும் வழங்க வேண்டும்.
இவ்வாறு கேபிள், "டிவி' ஆபரேட்டர்கள், தங்கள் மனக்குமுறல்களை கொட்டி வருகின்றனர். 

டி.டி.எச்., இணைப்பு, சன் குழுமத்தின் கேபிள் அடாவடி வசூல் குறித்து உளவு பிரிவு விசாரணை : கண்ணீர் வடிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் : தமிழகத்தில், கேபிள், "டிவி' ஆபரேட்டர்களிடம், சன் குழுமம் அடாவடி வசூல் செய்வது, டி.டி.எச்., இணைப்பு போன்றவைகள் குறித்து, உளவுப் பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அறிக்கை அனுப்பியுள்ளனர்.


தமிழகத்தில், கேபிள் கட்டணத்தை குறைப்பதற்காக, அரசு கேபிள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கேபிள், "டிவி' இணைப்பு பெற்றுள்ளோர் எத்தனை பேர், மாதந்தோறும் எவ்வளவு கட்டணம் செலுத்துகின்றனர், எத்தனை கேபிள் ஆபரேட்டர்கள், கன்ட்ரோல் அறைகள் உள்ளன, கேபிள் ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில், சன் குழுமத்திற்கு எவ்வளவு செலுத்துகின்றனர். மற்ற டி.டி.எச்., இணைப்பும் மக்கள் பெற்றுள்ளனரா, இதில் எந்த டி.டி.எச்., இணைப்பை மக்கள் அதிகம் பெற்றுள்ளனர் போன்ற தகவல்கள் குறித்து விசாரித்துள்ளனர்.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில், சன் டி.டி.எச்., 65 ஆயிரம் இணைப்பும், மற்றவைகள் ஐந்தாயிரத்திற்குள்ளும் இருப்பது தெரிய வந்துள்ளது. 2.5 லட்சம் கேபிள் இணைப்பு உள்ளதாகவும், மக்களிடம் அதிகபட்சமாக, 180 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து, அதில் பெரும்பாலான தொகையை சன் குழுமத்திற்கு, அச்சத்துடன் கேபிள், "டிவி' ஆபரேட்டர்கள் வழங்குவதும் தெரிந்தது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

கன்ட்ரோல் அறை பறிப்பு : கேபிள், "டிவி' ஆபரேட்டர்களிடம், கட்டண சேனல்களுக்காக, ஒரு இணைப்பிற்கு, 105 ரூபாய் வரை வசூல் செய்தனர். ஒரு கட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை குறைவாக கூறுகின்றனர் எனக் கூறி, ஆகாஷ் நிறுவனத்தினர், குறிப்பிட்ட பகுதிகளில், மின் இணைப்பு எத்தனை உள்ளது என கணக்கெடுத்தனர். மின் இணைப்பு பெற்றவர்களில், 75 சதவீதம் கேபிள் இணைப்பு இருக்கும் எனக் கூறி, கேபிள் ஆபரேட்டர்களிடம், "நீங்கள் சன் சேனல்கள் இணைப்பு பெற்றதில், பாக்கி 15 முதல், 20 லட்ச ரூபாய் வரை தர வேண்டும்' என மிரட்டி, பணத்திற்காக கேபிள், "டிவி' கன்ட்ரோல் அறையை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்தும் உளவுப் பிரிவு, அறிக்கை தயாரித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...