வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அனைத்து பாடங்களில் தோல்வியுற்றவர்களும் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அனுமதிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமையன்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதுவரை 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 3 பாடங்கள் வரை தோல்வியுற்றவர்கள் மட்டுமே உடனடியாக நடத்தப்படும் துணைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று அடுத்த கல்வியாண்டிலேயே உயர் கல்வியை தொடர முடியும்.
இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்கள் கூட துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2012-13ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள மாற்றுப் பள்ளிகள், உண்டு, உறைவிடப் பள்ளிகள், தேசியக் குழந்தைத் தொழிலாளர் நலத் திட்டப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, பஸ் பாஸ், மிதிவண்டி, உதவித் தொகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment