அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் உயர்த்தி வழங்கப்படும்'' என்று, சட்டசபையில் அமைச்சர் புத்திசந்திரன் அறிவித்தார்.
சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் புத்திசந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்: அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் பற்றி அளிக்கப்படும் தகவல்கள், சமூக விரோதிகளைக் கைப்பற்றுவதில் முடிந்தால், தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம், 500 ரூபாயிலிருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். போலி ரேஷன்கார்டுகள் கண்டுபிடித்து களையப்பட்டால், தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம் 200 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நுகர்வோர் தங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து கொள்ள உதவும், மாநில நுகர்வோர் உதவி மையம் தொடர்பான விளம்பர ஒலித் துணுக்குகள் தயாரிக்கப்பட்டு, வானொலி நிலையத்தின் சென்னை பண்பலை அலைவரிசை வாயிலாக ஒலிப்பரப்பப்படும்.
சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு, 53 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சொந்தக் கட்டடம் கட்டப்படும். வில்லிவாக்கம், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கும், மாவட்ட அளவில் தர்மபுரி, அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்களுக்கும், 5 புதிய ஜீப்கள் வழங்கப்படும். விஞ்ஞான முறையிலான 1,250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், தண்டையார்பேட்டை வட்டத்திலுள்ள தங்கசாலையில் கட்டப்படும். 1,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் கட்டப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காலி இடங்கள், பிற துறைக்கு சொந்தமான இடங்களில், மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கொள்ளளவு கொண்ட, கூடுதல் கிடங்குளை 47 கோடியே 50 லட்ச ரூபாய் நபார்டு வங்கி கடன் நிதியுதவியுடனும், 2 கோடியே 50 லட்ச ரூபாய் அரசு நிதியுதவியுடனும் கட்டப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, சொந்தக் கட்டடம் கட்டப்படும். இவ்வாறு அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment