|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 August, 2011

இந்தியாவுக்கு மீண்டும் அவமானம் ஓவல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி!

ஓவல் டெஸ்டில் சொதப்பலாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரை 0-4 என முழுமையாக இழந்து, மிகப் பெரும் அவமானத்தை சந்தித்தது. சச்சின்(91), அமித் மிஸ்ராவின்(84) போராட்டம் வீணானது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, கோப்பை வென்று சாதித்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 591 ரன்கள் குவித்து "டிக்ளேர் செய்தது. இந்திய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன் பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், "நைட்-வாட்ச்மேனாக களமிறங்கிய அமித் மிஸ்ரா இணைந்து பொறுப்பாக ஆடினர். இங்கிலாந்து பவுலர்களை எளிதாக சமாளித்த இவர்கள், அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தனர். "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வழிகாட்ட கலக்கலாக ஆடிய மிஸ்ரா 84 ரன்களுக்கு சுவான் சுழலில் போல்டானார். நான்காவது விக்கெட்டுக்கு சச்சின்-மிஸ்ரா 144 ரன்கள் சேர்த்தனர்.


விக்கெட் மடமட: இதற்கு பின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் ஏனோதானோ என ஆடினர். அம்பயர்களின் சில தீர்ப்புகளும் தவறாக அமைந்தன. மீண்டும் பந்துவீச வந்த பிரஸ்னன் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது "வேகத்தில் சச்சின் 91 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய ரசிகர்களின் நெஞ்சம் தகர்ந்தது. இதையடுத்து சதத்தில் சதம் காணும் சச்சின் கனவு இம்முறையும் பலிக்கவில்லை. சுவான் சுழலில் சுரேஷ் ரெய்னா(0) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். "ரீப்ளேவில் பந்து "இன்சைட் எட்ஜ் ஆகிச் சென்றது தெளிவாக தெரிந்தது. பொறுப்பற்ற "ஷாட் அடித்த கேப்டன் தோனி(3), பிராட் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் ஆர்.பி.சிங்கும்(0) அவுட்டானார். 8 ஓவர் இடைவெளியில் வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்க, தோல்வி உறுதியானது. தொடர்ந்து சுழலில் மிரட்டிய சுவான், காம்பிரையும்(3) அவுட்டாக்கினார். இதன் மூலம் தனது 5வது விக்கெட்டை பெற்றார். உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சார்பில் சுழலில் அசத்திய சுவான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
மூன்றாவது இடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என, மோசமாக இழந்த இந்திய அணி, ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் "நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்க அணி (118) இரண்டாவது இடம் பிடித்தது.
------
நான்காவது சோகம் இந்திய அணியின் 79 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில், முழுமையாக தோல்வியடைவது இது நான்காவது முறை. இதற்கு முன், இங்கிலாந்து (0-5, 1959), வெஸ்ட் இண்டீஸ் (0-5, 1961-62), ஆஸ்திரேலியா (0-4, 1967-68) அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. தவிர, 1967, 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-3, 1999-2000ல் ஆஸ்திரேலியாவுடன் 0-3 என மோசமாக தோற்றது.
---
21 ரன்களுக்கு 7 விக்.  கடைசி நாள் ஆட்டத்தில், சச்சின்-அமித் மிஸ்ரா ஜோடி, நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்க்க, இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்திருந்தது. பின் வந்தவர்கள் சொதப்ப, அடுத்த 21 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...