ஊழல் எதிர்ப்புவாதி அன்னா ஹசாரே நாளை மறுநாள் டெல்லியில் உண்ணாவிரதம்
இருக்கிறார். இதற்கு டெல்லி போலீசார் 22 நிபந்தனைகள் விதித்துள்ளனர். இதை
ஏற்க முடியாது என்று அன்னாஹசாரே அறிவித்துள்ளார்.
லோக்பால்
அதிகார வரம்புக்குள் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் கொண்டு வந்தால் தான்,
லோக்பால் சட்ட மசோதா வலுவானதாக இருக்க முடியும் என்று அன்னா ஹசாரே கூறி
வருகிறார். ஆனால் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ள லோக்பால் சட்ட
மசோதாவின் வரம்பில் பிரதமர், நீதிபதிகள், உயர் அதிகாரிகள்
சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பலவீனமான லோக்பால் சட்ட மசோதாவை எதிர்த்து
டெல்லியில் நாளை மறுநாள் (16-ந்தேதி) சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்க அன்னா
ஹசாரே முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஜெயப்பிரகாஷ்
நாராயண் பூங்கா இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் அவரது
ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு முழுவதும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை
தொடங்குகின்றனர். டெல்லியில் ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீசார் 22
நிபந்தனைகளை விதித்துள்ளனர். டெல்லியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில்
மட்டுமே உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டும்.
3
நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் தொடரக்கூடாது. உண்ணாவிரத பந்தலில் 5 ஆயிரம்
பேருக்கு மேல் அமரக்கூடாது. அவர்கள் ஒரே இடத்தில்தான் அமர்ந்து இருக்க
வேண்டும். சிறு சிறு குழுக்களாக பிரிந்து சாலையில் நிற்க கூடாது. 50
கார்கள் மற்றும் 50 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒலி
பெருக்கி கருவி பொருத்தக்கூடாது.
16-ந்தேதி காலை 8
மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி 18-ந் தேதி மாலை 6 மணிக்கே
முடித்துக் கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு மருத்துவ
குழுவினர் தினமும் 3 முறை மருத்துவ பரிசோதனை செய்வார்கள். யாருக்காவது
உடல்நலக் குறைவு காணப்பட்டால் அவர்கள் உண்ணாவிரதப்பந்தலில் இருந்து
உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவார்கள்.
இந்த
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவில் இடம்
பெற்றுள்ள சாந்திபூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண் பேடி
உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி அளிக்க வேண்டும். இவ்வாறு
நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின்
நிபந்தனைகள் அன்னா ஹசாரேக்கும், அவரது குழுவினருக்கும் அதிர்ச்சியையும்,
ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்
கொள்ளப்போவதில்லை என்று அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் திட்டவட்டமாக
அறிவித்து விட்டனர்.
இது பற்றி அன்னா ஹசாரே கூறியதாவது:-
எனது
உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் விதித்துள்ள நிபந்தனைகளை ஒருபோதும்
ஏற்றுக் கொள்ளமாட்டேன். நாட்டில் ஊழல் அதிகரித்து வருகிறது என்று அனைத்து
தரப்பு மக்களும் கூறுகிறார்கள். அதை தடுக்க உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படவில்லை. இப்போது மக்களை ஏமாற்றும் வகையில், பல் இல்லாத லோக்பால்
மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.
மக்களின்
அடிப்படை உரிமைகளை மறுக்கும் அரசு, ஜனநாயக கொலை செய்வதுடன் அரசியல்
அமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அரசு தரப்புடன்
பேச்சுவார்த்தை நடத்த எங்கள் பிரதிநிதி நீரஜ் குமார் இருமுறை சென்று
வந்துள்ளார். ஆனால் திருப்திகரமான முடிவு எட்டப்படவில்லை. உண்ணாவிரதம்
நடக்காமல் தடுக்கவே அரசு முயலுகிறது.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
இதற்கிடைய,
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்துள்ள ஜெயப்பிரகாஷ்
நாராயண் பூங்கா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தினால், அந்தப் பகுதியில் அமைதி
குலையும் என்று மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர் எனவே ஜெயப்பிரகாஷ்
நாராயண் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க, அன்னாஹசாரேவிற்கு அனுமதி அளிக்க
கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
பூங்காக்களை
உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கோர்ட்டு
தடை உள்ளது. இதை டெல்லி போலீசார் சரியாக கவனிக்காமல் ஜெ.பி.பூங்காவை
சிபாரிசு செய்துவிட்டனர் என்றும் போலீஸ் வட்டாரத்தில் இப்போது
தெரிவிக்கப்படுகிறது.
எனவே உண்ணாவிரத
போராட்டத்திற்கு தடை விதிக்கலாமா? என்று டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள்
ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் நடந்த
அசம்பாவிதம் போல், இனிமேலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, முன்
எச்சரிக்கை நடவடிக்கையாக அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு 22
நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
நிபந்தனைகள்
ஏற்கப்படாத பட்சத்திலும், ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா பகுதி மக்களின்
எதிர்ப்பு காரணமாகவும், கடைசி நேரத்தில் உண்ணாவிரதத்துக்கு தடை
விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. போலீஸ் என்ன நிபந்தனை விதித்தாலும்
அதை மீறுவது என்ற முடிவில் அன்னா ஹசாரேயும் அவரது குழுவினரும் உள்ளனர்.
எனவே
தடையை மீறும் பட்சத்தில் பாபாராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம்
தொடங்கியபோது அவரை இரவோடு இரவாக போலீஸ் படையை குவித்து அப்புறப்படுத்தியது
போல் அன்னா ஹசாரேயும் அப்புறப்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதே சமயம்
நாடு முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதத்தை அரசு என்ன செய்யப் போகிறது என்று
தெரியவில்லை.
இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை
நிலவுகிறது. நாளை சுதந்திர தின விழா முடிந்ததும் மத்திய அரசு அதிரடி
நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment