|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2011

இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்!

தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு ஆடுகள் தரப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் பேருக்கு தலா நான்கு ஆடுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏழை விவசாயிகளுக்கு ஆடுகள்: பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஏழு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 1.5 லட்சம் பேருக்கும் இலவசமாக ஆடுகள் வழங்கப்படும்.

நடப்பாண்டில் ரூ. 135 கோடி: நான்கு ஆடுகள் ரூ.10 ஆயிரம் விலையில் வழங்கப்படும். அதாவது ஒரு ஆடு ரூ.2,500 விலை; தீவனச் செலவு ரூ.500 சேர்த்து ஒரு ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் செலவிடப்படும். அதன்படி நான்கு ஆடுகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவிடப்படும். ஆடுகள் காப்பீடு செய்யப்படும். காப்பீடு, ஆடுகளை வாங்கி வருவதற்கான போக்குவரத்துச் செலவு என தனியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.500 ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளைக் கிராம அளவிலான குழு மேற்கொள்ளும். இந்தக் குழு பரிந்துரைக்கும் பயனாளிகளின் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை, கிராமங்களில் உள்ள கிராம சபைகள் செய்யும். ஏழை விவசாயக் குடும்பங்களில் உள்ள பெண்களே பயனாளிகளே இருப்பார்கள்.

விவசாயக் கூலிகளுக்கு மட்டுமே: இலவச ஆடுகளைப்பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாக இருக்க வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பசு, ஆடுகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. அரசுப் பணியில் இருக்கக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் கூட அரசுப் பணியில் இருந்திடக் கூடாது.

மாடு வாங்கினால் ஆடு கிடையாது: இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட (29 சதவீதம் பேர்) மற்றும் பழங்குடியின (1 சதவீதம்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்கள் இருப்பர். மாவட்ட அளவிலான குழுவில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) இருப்பர். பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கிராம அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் அமைப்பார். இந்த கிராம அளவிலான குழுவில் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு வார்டின் மூத்த தலைவர் உள்ளிட்டோர் இருப்பர்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் விவரங்களைக் கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரும் சரிபார்ப்பர். பயனாளிகள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளா என்கிற விவரம் கிராம நிர்வாக அலுவலரின் துணையுடன் உறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

ஒரு ஆண் ஆடு, 3 பெண் ஆடு

செம்மறி அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல் செய்யப்படும்.

ஆடுகளின் காதில் ஐடி கார்டு: இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடு என்பதைக் குறிக்கும் வகையில், கொள்முதல் செய்யப்படும் ஆடுகளின் இடது காதில் ஓட்டை போடப்படும் அல்லது கயிறு தொங்கவிடப்படும். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இந்த எண் பெரிதாக தெரியும் வகையில் புகைப்படம் எடுக்கப்படும். பயனாளிகள் இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசு மாடு வாங்க ரூ. 232 கோடி: இதேபோல அரசின் இலவச பசுக்கள் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 பசு மாடுகள் கொள் முதல் செய்யப்படும். அதில் நடப்பாண்டில் மட்டும் ரூ. 56 கோடியில் 12,000 பசுக்கள் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு தரப்படும்.

கலப்பின ஜெர்சி பசுக்கள் இத்திட்டத்திற்காக வாங்கப்படும். இந்த மாடுகள், 5 வயதுக்கு உட்பட்டவையாக இருக்கும். இலவச திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெறும் விவசாயிகள் அதை நான்கு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. இலவச ஆடுகள் திட்டத்துக்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அதுவே இந்தத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...