|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2011

ஈழத் தமிழர் பிரச்னையை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி: பழ.நெடுமாறன் !

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர் பிரச்னை எழுப்பப்படும் என்பதால் எதிர்க்கட்சிகளை திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபட்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு  அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின்  மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ்  கொழும்பு சென்று ராஜபட்சேவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு  அனுப்பப்பட்டுள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சினை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபட்சே குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோமன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன். இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...