|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 August, 2011

தானத்தை தவறாகப் பயன்படுத்தி, அதை வர்த்தரீதியில் விற்பதை தடுக்க புதிய சட்டம்!

சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானத்தை தவறாகப் பயன்படுத்தி, அதை வர்த்தரீதியில் விற்பதை தடுக்க புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறவும், வெளிநாட்டினரின் உறுப்புகளை இந்தியர்கள் வாங்கவும் தடை விதிக்கப்படவுள்ளது.

கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இதன்படி திசுக்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சட்ட விரோதமாக விற்றால் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1 கோடி அபராதமும் விதிக்கப்படும். இதன்மூலம் ஏழை மக்கள் தங்கள் உடல் உறுப்புக்களை பணத்துக்காக விற்பதை தடை செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இந் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஜிப்மர், சென்னையைச் சேர்ந்த உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பு அமைப்பான "மோகன் பவுண்டேஷன்' ஆகியவை இணைந்து மனித உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. அதில் பேசிய, மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் என்.கே. மொகந்தி கூறுகையில், இப்போது உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அனுமதி வழங்கும் குழுவின் ஒப்புதலுடன் இந்தியரின் உறுப்புகளை வெளிநாட்டினர் பெற்று மாற்று சிகிச்சை செய்து கொள்ளும் நிலை உள்ளது. திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதற்கு தடை ஏற்படும்.

இந்தியாவில் மனித உறுப்புகள் தானம் தேவைப்படுவோருக்கும், அதைக் கொடுப்போருக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியாவில் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகங்கள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.5 லட்சமாக உள்ளது. ஆனால், ஆண்டுக்கு 4,500 முதல் 5,500 சிறுநீரகங்கள் மட்டுமே உறவினர்கள் மூலமும் தானமாகவும் கிடைத்து வருகின்றன.

அதே போல ஆண்டுக்கு 50,000 பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 400 பேருக்கு மட்டுமே கல்லீரல்கள் மட்டுமே தானம் மூலம் கிடைக்கின்றன. பொது மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றார்.

மோகன் பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் சுனில் ஷெராப் பேசுகையில், உடல் உறுப்புகள் தானம் தென்னிந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன. வட இந்தியாவில் தானம் தருவோர் மிக மிகக் குறைவு. இதில் தமிழ்நாடு தான் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. இப்போது மக்களிடம் பொருளாதார வசதி அதிகரித்துவிட்டதாலும், சுகாதார காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு வசதிகளாலும், நவீன மருத்துவ தொழில்நுட்பங்களாலும் உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது சவாலாகத்தான் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் பவுண்டேஷனின் நோக்கம். உறுப்புகள் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியையும் எங்கள் பவுண்டேஷன் நடத்தியது என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...