|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 August, 2011

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் தேர்தல்!

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாகவே வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுவரையிலும் மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை இருந்து வந்தது. இதை மாற்றி நேரடித் தேர்தல் மூலம் மக்களே அவர்களைத் தேர்வு செய்ய இந்த மசோதா வழி வகுக்கும். இந்த மசோதாவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மாநகராட்சிகளின் மேயர்களும், மற்றும் நகராட்சிகளின் தலைவர்களும் மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு இடையே இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான மேயர்கள் அல்லது தலைவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி முழுவதின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.எனவே மாநகராட்சியின் மேயருக்கான மற்றும் நகராட்சியின் தலைவருக்கான தேர்தல் முறையை மறைமுக தேர்தல் முறையிலிருந்து நேரடி தேர்தல் முறைக்கு மாற்றுவதென்று அரசு முடிவு செய்துள்ளது.

அது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் மேம்பட்ட நிர்வாகத்திற்கு எளிதாக வழிவகுக்கும். மக்களுக்கு இன்னமும் திறம்பட்ட முறையிலும் விரைவாகவும், பொதுப் பணிகளை வழங்கும் விளைவினை ஏற்படுத்தும்.எனவே தமிழக அரசானது மாநகராட்சியில் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை தக்கவாறு திருத்துவதென்று முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...