|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 August, 2011

லெனின் தங்கப்பா நூலுக்கு சாகித்ய அகடமி விருது!

புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா நூல், சாகித்ய அகடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாகித்ய அகடமியால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், சிறந்த படைப்பிலக்கியங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, குழந்தை இலக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு விருதையும், சாகித்ய அகடமி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான (2010) குழந்தை இலக்கிய விருதுக்கு, புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 14ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில், இதற்கான விருது வழங்கப்பட உள்ளது. இவர் எழுதிய,"சோளக்கொல்லை பொம்மை' என்ற நூல், இவ்விருதைப் பெற்றுத் தந்துள்ளது. 40க்கும் மேற்பட்ட நூல்களை தங்கப்பா எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம், குறும்பலாபேரியை சொந்த ஊராகக் கொண்ட இவர், 1959 முதல், புதுச்சேரியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரான தங்கப்பா, தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். எழுத்தாளர் தங்கப்பா கூறுகையில்,"உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு பழகி, இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததன் 

வெளிப்பாடாக,"சோளக்கொல்லை பொம்மை' நூலை எழுதினேன். தகுதியான நூலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' எனக் குறிப்பிட்டார். சாகித்ய அகடமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் மகரந்தன், பூவுலகின் நண்பர்கள், நட்புக் குயில்கள், கலை இலக்கியப் பெருமன்றம், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழக நிர்வாகிகள் எழுத்தாளர் தங்கப்பாவை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...