சுதந்திர காங்கிரஸும், சோனியா காங்கிரஸும் கொங்கு இளைஞர் பேரவை !
காங்கிரஸ் ஒரு கட்சியே அல்ல, இப்போது இருப்பது சுதந்திரம் வாங்கியபோது
இருந்த காங்கிரஸ் அல்ல, இது சோனியாவின் காங்கிரஸ் என்று கொங்கு இளைஞர்
பேரவை உறுப்பினர் தனியரசு கூறியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோபமடைந்து
குரல் எழுப்பினர். பின்னர் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு பேசுகையில்,
மத்தியில்
ஆளும் காங்கிரஸ் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. கா ங்கிரஸ்
மக்களுக்கான கட்சி அல்ல. இந்திரா காங்கிரஸ், ராஜீவ் காங்கிரஸ், சோனியா
காங்கிரஸ், பிரியங்கா காங்கிரஸ் என்றுதான் இருக்கிறது.
மக்கள் மீது
இவர்களுக்கு அக்கறையே கிடையாது. அதனால்தான் தமிழகம் மீது பாராமுகமாக
உள்ளனர். தமிழக மக்களின் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் உள்ளனர்
என்று கூறினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் எழுந்து பேசுகையில், தமிழக
முதல்வர் டெல்லி சென்று நிதி ஒதுக்க கேட்டபோது, ரூ.23 ஆயிரம் கோடி நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் முதலமைச்சர்
கூறும்போது கூட நிதி ஒதுக்கீடு திருப்தி அளிப்பதாக கூறினார்.
மத்திய
அரசு மீது சில குறைபாடுகள் இருக்கலாம். அதை மாநில அரசு பேசி சரி செய்து
கொள்ள முடியும். ஆனால் இங்கு பேசிய உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு மத்திய
அரசு துரோகம் செய்ததுபோல் பேசினார்கள்.
கொங்கு இளைஞர் பேரவை
உறுப்பினர் பேசும்போது, காங்கிரஸ் ஒரு கட்சியே அல்ல என்று கூறி எங்கள் மனதை
புண்படுத்தி உள்ளார். இது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே அந்த வார்த்தையை
சபை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்’ என்றார்.
ஆனால் அதை நீக்க
சபாநாயகர் உத்தரவிடவில்லை. இதையடுத்து தொடர்ந்து பேசிய தனியரசு, நான்
சுதந்திரம் அடைந்தபோது இருந்த காங்கிரசை பற்றி சொல்லவில்லை. சோனியா
காங்கிரசைதான் சொல்கிறேன் என்றார். இதற்கு மீண்டும் காங்கிரஸார்
கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். பின்னர் தனியரசு பேச்சைக்
கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக கூறி ரங்கராஜன் தலைமையில் அனைவரும்
வெளியேறினர்.
thanga thalaivar thaniyarasu
ReplyDelete