இதுவரை, முழு ஆண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே, தேர்ச்சிக்குரிய அளவுகோலாக கணக்கிடப்பட்டு வந்த நிலையில், இனி காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வில் பெறக்கூடிய மதிப்பெண்களும் கூட்டப்பட்டு, புதிய முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.
பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இதில், முழு ஆண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தான், மாணவர்கள் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், காலம் காலமாக ஒரு சடங்காகவே நடந்து வருகின்றன. இதற்கு, பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
ஆனாலும், தேர்வுக்கு படிப்பதற்காக மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதையெல்லாம் மனதில்கொண்டு, புதிய தேர்வு நடைமுறையை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவர் கூறும்போது, "மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில், முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும். முழு கல்வி ஆண்டிற்குரிய புத்தகங்கள் மூன்றாக பிரித்து வழங்கப்படும். ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் " என்று அறிவித்தார்.
இதன்படி, இனி மாணவர்களின் தேர்ச்சி அளவுகோலில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளும் இடம்பெறுகின்றன. மூன்று பருவ தேர்வுகளிலும் பெறுகின்ற மதிப்பெண்களை கூட்டி, புதிய முறையில் கணக்கிடப்பட்டு, மதிப்பெண்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, "மாணவர்களின் மன அழுத்தத்திற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இந்த புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு பருவ தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இனி கணக்கிடப்படும். இது குறித்த விரிவான நடைமுறை விதிகள் விரைவில் வெளியிடப்படும். மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஒரு பாடத்திற்கான புத்தகம், மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் " என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும், அதற்குரிய பாடங்களை நடத்துவது கிடையாது. ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பிற்கான பாடங்களும், பிளஸ் 1ல் பிளஸ் 2 பாடங்களும் நடத்தப்படுகின்றன. புதிய தேர்வு திட்டத்தின்படி, இனி இதுபோன்று செயல்பட முடியாது. அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களை நடத்தியாக வேண்டிய கட்டாயம் அப்பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment