|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 September, 2011

கர்நாடகத்தின் ரெய்ச்சூரில் ஊட்டச்சத்து குறைவால் ஓராண்டில் 1,000 குழந்தைகள் பலி!


கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்டத்தில் கடந்த ஒராண்டில் ஊட்டச் சத்துக் குறைவால் தவித்த சுமார் 1,000 குழந்தைகள் பலியாகியதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் அதிகளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களை பசியும், பட்டினியும் வாட்டி வதைத்தது. இதில் முக்கியமாக தேவதுர்கா, சிந்தனூர், மான்வி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் சத்தான உணவு இல்லாமல், கடந்த ஒராண்டில் மட்டும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிகிறது. மேலும் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் கூறியதாவது, ரெய்ச்சூர் மாவட்டத்தில் உறவு முறையில் திருமணம் செய்யும் முறை அதிகம். இதனால் ரத்த தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தான் அதிகளவில் மெலிந்து காணப்படுகின்றனர். இந்த குழந்தைகளுக்கு தகுந்த ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதுகுறித்து மாநில முதல்வர் சதானந்த கவுடா கூறியதாவது, ரெய்ச்சூரில் குழந்தைகள் இறப்பது குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவிக்கும் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் சத்துணவு அளிக்க உத்தவிட்டுள்ளேன். மாவட்டத்தின் கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...