பிளஸ் 2 தனித் தேர்வில், "பிட்' அடித்து, பறக்கும் படையினரிடம்
சிக்கிக்கொண்ட இரண்டு தலைமை ஆசிரியர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,
தேர்வு மையத்தில் பரபரப்பு நிலவியது.பத்தாம் வகுப்பு படித்து, அதன்பின் ஆசிரியர் பயிற்சி முடித்து,
ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம்
பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வந்தனர். பிளஸ் 2
படிக்காமல், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர் களை அரசு பணியில்
சேர்க்கவும், ஏற்கனவே அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு
வழங்கவும் தடை விதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு
உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், "அரசு உத்தரவு சரியே' என, கோர்ட் தீர்ப்பு கூறியது. இதன் காரணமாக,
திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு
பெற்றவர்கள், பதவி உயர்வை தக்க வைத்துக் கொள்ள பிளஸ் 2 தேர்வு எழுதி
வருகின்றனர்.
நேற்று முன்தினம் துவங்கிய பிளஸ் 2 தனித் தேர்வில், கடலூர்
மாவட்டம், விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி
மையத்தில், இதுபோன்ற ஆசிரியர்கள் தேர்வெழுதினர். பறக்கும் படையினர் திடீரென
ஆய்வு செய்தபோது, புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதிய வேப்பூர் அரசு
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், மங்களூர் அடுத்த வடபாதி
கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர்
பிடிபட்டனர். இவர்களுடன், "பிட்' அடித்த ஐந்து மாணவர்களும் பிடிபட்டனர்.
பிடிபட்ட தலைமை ஆசிரியர்கள், "நாங்கள் தலைமை ஆசிரியர்கள். எங்களையே, "பிட்'
அடித்ததாக பிடிக்கிறீர்களா?' என, வாக்குவாதம் செய்தனர். மாணவர்களுக்கு
வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே, இப்படி வழி தவறிய அவலம், கல்வித்துறைக்கு
களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment