சபரிமலையில் குவியும் பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணிநேரம்
காத்திருக்காமல், விரைவாக தரிசனம் முடித்து திரும்ப போலீசார் ஏற்பாடு
செய்துள்ளனர். இதற்கு, போலீசார் அறிவிக்க உள்ள வெப்-சைட்டில் பக்தர்கள்
முன்னரே பதிவு செய்ய வேண்டும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள
சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது
வழக்கம். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலோர் மண்டல மற்றும் மகர ஜோதி
தரிசனத்திற்காக வருகின்றனர். அக்கால கட்டங்களில் சபரிமலையில் நெரிசல்
அதிகரித்து, நீண்ட வரிசையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது
நேரிடும். இதை தவிர்க்க மாநில போலீசார், தங்களது வெப்-சைட்டில் முன்னரே
பதிவு செய்து விட்டு வரும் பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணிநேரம்
காத்திருக்காமல், விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன்
மூலம், ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
இதற்கான வெப்-சைட் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு
வருவதாக, மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., பி.சந்திரசேகரன் தெரிவித்தார்.
தரிசன நேரம் அதிகரிப்பு: பக்தர்களின்
வசதிக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், தரிசன நேரம் அதிகரிக்கப்படுகிறது.
மண்டல கால உற்சவம் துவங்குவது முதல், அதிகாலை 3 மணிக்கு நடை
திறக்கப்படும். இதுவரை மண்டல மற்றும் மகர ஜோதி உற்சவ காலங்களில், அதிகாலை 4
மணிக்கு நடை திறக்கப்படும். உச்சிக்கால பூஜை முடிந்து பிற்பகல் 1 மணிக்கு
நடை அடைக்கப்படும். அதன்பின், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11
மணி வரை தரிசனம் செய்யலாம். தரிசன நேரம் மாற்றப்படுவதால், இனி அதிகாலை 3
மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து திறந்திருக்கும் நடை, மதியம்
உச்சிக்கால பூஜைக்குப் பின், பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். பிற்பகல் 3
மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு அடைக்கப்படும். இதுகுறித்து
இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும். தரிசன நேரம் அதிகரிப்பது குறித்து,
தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு சுவாமியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. சபரிமலை
சன்னிதான பகுதியில் அகற்றப்படும் பந்தல்களுக்கு பதிலாக, பாண்டித்தாவளம்
பகுதியில் 30 ஆயிரம் சதுரடியில் பக்தர்களுக்காக பந்தல் அமைக்கப்படும்.
இதனால், கூடுதலாக ஆறு ஏக்கர் நிலப்பரப்பளவில் பக்தர்களுக்கு வசதி
ஏற்படுத்தப்படும். இத்தகவல்களை, நேற்று முன்தினம் சபரிமலையில்
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வழக்கறிஞர் எம்.ராஜகோபாலன் நாயர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment