மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை அடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. மக்கள் நலப்பணியாளர்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு 09.11.2011 அன்று பிறப்பித்த உத்தரவு உயர்நீதிமன்ற ஆணைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் மனுவை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுனா, அனைவரையும் மீண்டும் வேலையில் சேர்க்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு அரசு நியமித்த ஊழியர்களை இன்னொரு அரசு நீக்க வேண்டுமா? ஆட்சி மாறினால் அரசுப் பணியாளர்களை மாற்ற வேண்டுமா? ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலப்பணியாளர்கள் கால்பந்து அல்ல என்று கூறினர். இந்த வழக்கை தனி நீதிபதியே விசாரித்து முடிப்பார் என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன், மக்கள் நலப்பணியாளர்கள் அரசு ஊழியர்கள். அவர்களை கால்பந்தைப் போல எட்டி உதைக்கக் கூடாது. அவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதை கண்டு வருத்தப்படுகிறேன் என்று நீதிபதி தெரிவித்தார் என்றார்.
மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்த்தின் தலைவர் மதிவாணன், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை நீதிமன்ற நீதிபதி சுகுனாவின் உத்தரவை, உடனடியாக அமுல்படுத்திவிட்டு, அரசு தரப்பு வாதங்களை அந்த நீதிமன்றத்திலேயே தெரிவிக்கலாம் என்றும், மக்கள் நலப்பணியாளர்களை ஆட்சி மாறும்போதெல்லாம் கால்பந்து போல பந்தாடிக்கொண்டிருக்கிறீர்கள். இது கண்டனத்துக்கு உரியது. மக்கள் நலப்பணியாளர்களும், சாதாரண கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள். இவர்களை பாதுகாக்க வேண்டியது பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே உயர்நீதிமன்ற நீதிபதி சுகுனாவின் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ஆனதால், மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனினும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment