|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 November, 2011

பிளாஸ்டிக் பொம்மைகளே உயிருக்கு ஆபத்தாக...?


குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சிறு குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு சாமான்களும், மரப்பாச்சி பொம்மைகளும் விளையாட்டு பொருளாக இருந்தன. காகித பொம்மைகளும், பனையோலை பொம்மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன. சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை இன்றைக்கு எங்கு திரும்பினாலும் குழந்தைகளுக்கு என சிறப்பு அங்காடிகளும், அவற்றில் விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகளும் பெருகியுள்ளன.

ஆபத்தான ரசாயனம்  இந்த பிளாஸ்டிக் பொம்மைகள் மென்மையான நெகிழும் தன்மையுடையவை. இவைகளை வைத்து விளையாடும் குழந்தைகள் அவற்றை மெதுவாய் சுவைக்கின்றன. இவையே குழந்தைகளுக்கு நோய்களை உண்டு செய்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். பிளாஸ்டிக் பொருளுக்கு நெகிழும் தன்மையை தருவது தாலேட்டு என்னும் ரசாயனப்பொருள்தான். இது விஷத்தன்மை வாய்ந்ததாகும். இது குழந்தைகளின் உடம்பில் தங்கி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் தாக்கும் பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சுவைக்கும் போது, தாலேட்டு ரசாயனம் மெதுவாக குழந்தையின் வயிற்றுக்குள் செல்கிறது. பின்னர் கொழுப்புத் திசுக்களில் தங்கி, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் சிறுநீரக பாதிப்பும், ஆண் குழந்தைகளுக்கு விந்து உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்பும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மன வளர்ச்சி பாதிப்பு பொம்மை தயாரிப்பதில் சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் காரியமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். இந்த பொருட்கள் அடங்கிய பொம்மைகளினால் குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, கல்வி வளர்ச்சி குறையும் என்பது ஆய்வாளர்களின் அச்சம்.

அமெரிக்காவில் தடை இதன் காரணமாகவே அமெரிக்காவில் இத்தகைய பொம்மைகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தாலேட்டு கலப்படம் செய்யப்படாத பொம்மை என்ற முத்திரையுள்ள பொம்மை மட்டுமே அங்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் மூன்று வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு பொம்மைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பல கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதில்லை.

தடை விதிக்க வேண்டும் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்ட பொம்மைகள் கூவி கூவி விற்பனை செய்யப்படுகின்றன. இளைய தலைமுறையினரை கொல்லும் பொம்மைகளை விற்பனை செய்யப்படுகின்றன. விழிப்புணர்வுடன் செயல்பட்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்குவதை நாமே தவிர்க்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்க ஊக்கப்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட விஷத்தன்மையுள்ள பொம்மைகளை இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...