கருத்தரிப்பதற்கு முன்பிருந்தே நடை பயிற்சி, சமச்சீரான உணவு என, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சோர்ந்து படுக்காமல், உடம்பிலுள்ள தசைகளுக்கும், மூட்டுகளுக்கும் வேலை கொடுக்கும் வகையில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, எந்தப் பிரச்னைகளும் இல்லாமல், நம்மால் பிரசவிக்க முடியும் என்ற மன தைரியத்துடனும், அதற்கு ஏற்ற உடல் வலுவுடனும் இருந்தால், 40 வயதில் கூட, தலைப்பிரசவத்தை சுகப் பிரசவம் செய்து கொள்ள முடியும்.பிரவசத்தின் போது வலியைக் குறைக்கவும், இப்போது பல வழிமுறைகள் வந்துவிட்டன. சில பெண்களுக்கு, ஒன்பதாவது மாதம் வரை இருந்த மன, உடல் வலு, பிரசவ வலி எடுத்தவுடன் பறந்துவிடும். அந்த பயம் தேவையில்லை.லேபர் வார்டில், மருத்துவரின் வழிகாட்டலின்படி நடந்து, மருத்துவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பிரசவம் சுலபமாகும். சக்தியை எல்லாம், அழுது கத்துவதில் செலவழிக்கக் கூடாது.எந்தப் பெண்ணிற்கும், தொடர்ச்சியாக பிரசவ வலி எடுக்காது. 45 வினாடிகள் வலி எடுத்தால், அடுத்த மூன்று நிமிடங்களுக்கு வலி இருக்காது.மீண்டும், 45 வினாடிகள் வலி, மூன்று நிமிடம் வலியின்மை என்று தொடரும். அந்த மூன்று நிமிடங்களில், கர்ப்பிணிகள் தங்களை வலியில் இருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.ஒரு கர்ப்பிணியின் இடுப்பு எலும்பு அமைப்பு சரியாக இருந்து, குழந்தையின் தலை அளவும் சரியாக இருந்தால், அந்த சுகப்பிரசவம் சுலபமாக முடிந்துவிடும்.இயற்கையின் இன்னுமோர் ஆச்சர்யம் பிரசவம்!
No comments:
Post a Comment